சந்தைக்கு வரும் ஐபிஓ - எல்ஐசி பங்கு விலை 949 ரூபாய்; பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் தள்ளுபடி

சந்தைக்கு வரும் ஐபிஓ - எல்ஐசி பங்கு விலை 949 ரூபாய்; பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் தள்ளுபடி
சந்தைக்கு வரும் ஐபிஓ - எல்ஐசி பங்கு விலை 949 ரூபாய்; பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் தள்ளுபடி
Published on

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ அடுத்த வாரம் சந்தைக்கு வருகிறது. ஆயுள் காப்பீடு துறையின் ஜாம்பவானாக விளங்கிவரும் எல்ஐசியின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 ஆக இருக்கும் என புதன்கிழமை எல்ஐசி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவர் ஆர்.குமார் அறிவித்தார். இதன்மூலம் எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு எல்ஐசி பங்குகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 60 ரூபாய் வரை தள்ளுபடி எனவும், ஊழியர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 40 ரூபாய் தள்ளுபடி எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்ஐசி பங்கு விற்பனையில் 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2.21 கோடி பங்குகள் பாலிசிதாரர்களுக்கும்; 15.80 லட்சம் பங்குகள் ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் இயக்கநர்கள் குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.

சென்ற நிதி ஆண்டிலேயே எல்ஐசி ஐபிஓ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் தாமதத்தை சந்தித்த இந்த பங்கு விற்பனைக்கான தேதிகள் மற்றும் விவரங்கள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகளை, அதாவது 22.13 கோடி பங்குகளை விற்று 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஐபிஓ மூலம் எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு பங்குச்சந்தையில் நிரூபணமாகும் என முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்தார். குறைந்த விலையில் எல்ஐசி பங்குகள் சில்லரை முதலீட்டாளர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு ஐபிஓ மூலம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக மத்திய அரசு ஐபிஓ மூலம் எல்ஐசி நிறுவனத்தின் 10 சதவிகிதம் பங்குகளை விற்று 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டிருந்தது. எல்ஐசி ஐபிஓ குறித்து தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற வருடம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ஐபிஓ முடிந்தபின் மே 17ஆம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தகம் செய்யப்படும். ஆங்கர் முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படும் பிரதான முதலீட்டளார்கள் மே 2ஆம் தேதி முதல் எல்ஐசி பங்குகளை வாங்க விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். சில்லரை முதலீட்டாளர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் ஊழியர்கள் விற்பனை மே 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் பங்கு விலை என்ன, யாருக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்படும்.

மத்திய அரசு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்கக்கூடாது என அரசியல்ரீதியாக எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. பாலிசிதாரர்கள் பணம் எல்ஐசி வசம் உள்ளது எனவும், அவர்கள் முதலீடு பாதிக்கப்படும் எனவும் இடதுசாரி காட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எல்ஐசி தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், சிறு சதவிகிதம் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் அரசு தெரிவித்து வருகிறது. எல்ஐசி லாபத்தில் இயங்கிவருகிறது என்பது ஆயுள் காப்பீடு துறையில் முன்னணியில் இருந்து வருகிறது என்பது தவிர இந்திய பங்குசந்தையில் எல்ஐசி மிகப்பெரிய முதலீட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com