அடுத்த மாதம் முதல் வாரத்தில் எல்.ஐ.சியின் பொதுப்பங்கு வெளியீடு இருக்கும் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மத்திய அரசு தன்வசம் உள்ள பங்குகளில் 7 சதவீதம் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. இதன் மூலம் ரூ.50,000 கோடி அளவுக்கு திரட்ட இருக்கிறது.
கடந்த ஆண்டு வெளியான பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓதான் இதுவரை இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் மிகப்பெரிய ஐபிஓ ஆகும். இந்த நிலையில் எல்.ஐ.சி ரூ.50000 கோடி அளவுக்கு திரட்ட இருக்கிறது.
ஐபிஓ வெளியிட ஏற்கெனவே செபியின் அனுமதியை எல். ஐசி வாங்கி இருக்கிறது. ஐபிஓ வெளியிடுவதற்கு மே 12-ம் தேதி வரை புதிதாக எந்த அனுமதியும் வாங்க தேவையில்லை. ஒருவேளை இந்த தேதிக்குள் ஐபிஓ வெளியிட முடியவில்லை என்றால் மீண்டும் செபியை நாட வேண்டி இருக்கும். அதனால் அந்த அனுமதி முடிவதற்குள் வெளியிட அரசு திட்டமிட்டுவருகிறது.
கடந்த நிதிஆண்டுக்குள் (மார்ச்க்குள் 2022) வெளியிட அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தையில் சாதகமான சூழல் இல்லை என்பதால் தள்ளிவைக்கப்பட்டது. எல்.ஐ.சியின் ஐபிஓவுக்காக பல நிறுவனங்கள் தங்களது ஐபிஒ முடிவை தள்ளி வைத்திருக்கின்றன. மொபிகுவிக், டெலிவரி, பார்ம் ஈஸி உள்ளிட்ட நிறுவனங்களின் ஐபிஒ வர உள்ளன.