இன்று முதல் தக்காளியின் விலை படிப்படியாக குறையும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் சுற்று வட்டார வணிகர் நல சங்கத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவில் பங்கேற்ற வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், “ வணிகர்களுக்கு ஏற்படுகின்ற இடர்பாடுகளை அகற்றக் கூடிய தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறோம். வணிகர் சங்க வாரியம் அமைப்பதற்கு மூன்று மாத காலம் கட்டண சலுகையோடு தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் அதை மூன்று மாத காலத்திற்கு கட்டண சலுகையுடன் நீட்டிக்க வலியுறுத்தியுள்ளோம்.
அதேபோல் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கணிசமாக குறைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மழையால் பல்வேறு கடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் அதனை நேரில் ஆய்வு செய்த முதல்வர் இழப்பீடு வழங்க வேண்டும், வருகின்ற காலங்களில் வணிகர் நலவாரியத்தில் இழப்பீடு தொகையை உயர்த்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்
மேலும், “ மழைக்காலங்களில் தக்காளியின் விலை உயர்வது இயல்பானது. ஆனால் தற்போது தக்காளியின் விலை குறைந்துள்ளது, காரணம் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் இல்லாமல் சத்தீஸ்கரில் இருந்து 4 நாட்களுக்கு பிறகு தக்காளி வந்தடைகிறது.. வாகன வாடகை உயர்வு காரணமாக தக்காளி விலை அதிகரித்ததாக கூறிய அவர், இன்று முதல் தக்காளியின் விலை படிப்படியாக குறையும்” என தெரிவித்தார்.