இந்திய வங்கிகள் இன்று சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்னை கட்டுக்கடங்காமல் போன வாராக்கடன்தான். அதற்கு காரணம் இந்திய வங்கிகளின் நிர்வாகக் கோளாறுதான் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய் வி ரெட்டி கூறியுள்ளார்.
இந்தியாவில் வங்கித்துறையின், இன்றைய நிலை என்ற தலைப்பில் பேசிய ஒய் வி ரெட்டி, "வாராக்கடன் அதிகரித்ததற்கு காரணமானவர்கள் யார் என்பதை ஆய்வு செய்து அவர்களைப் பொறுப்பாக்க வேண்டும். ரிசர்வ் வங்கி இதற்கான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இதற்கு ரிசர்வ் வங்கியிலேயே ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்து, விசாரணை நடத்த வேண்டும்" என கூறியுள்ளார்.
2003ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றிய ஒய் வி ரெட்டி, அப்போது ஏற்பட்ட சர்வ நிதிச் சிக்கல் பிரச்னைகள் இந்தியாவை பாதிக்காத அளவு, நமது பொருளாதாரத்தைப் பாதுகாத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய வங்கித்துறை பற்றி, மேலும் பல கருத்துகளை பகிர்ந்து கொண்ட ஒய் வி ரெட்டி, "சர்வதேச ஒப்பந்தங்களால், தற்போது அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளின் பளு, நிதி நிர்வாகத்தை அதிகமாக பாதிக்கிறது. அதை தவிர்க்க முடிந்தால், பிரச்னையைச் சமாளிக்கலாம். உதாரணமாக, சர்வதேச அளவில் போட்டி என்பதற்காக இந்திய வங்கிகள் சில கட்டாய நெருக்கடிகளை இன்று சந்திக்க வேண்டியுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, "தற்போதுள்ள எஸ்எல்ஆர் (SLR) மற்றும் சிஆர்ஆர் (CRR)போன்ற வரம்புகளைக் குறைக்க வேண்டும். சர்வதேச வங்கிகளில் உள்ள அளவுக்கு, இங்கும் தேவை என்பது வங்கிகளின் மீதும், அதன் நிர்வாகத்தின் மீதும் தேவையில்லாத பளு" என்ற அவர், "தற்போது இந்திய வங்கிகளில் பன்னாட்டு/வெளிநாட்டு முதலீடு, அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதை குறைக்க வேண்டும். வங்கிகளின் பங்கு மூலதன அளவை அதிகரிக்க வேண்டும் என்ற பெயரில், இன்று பொதுமக்களின் பணத்தை அள்ளி வங்கிகளுக்கு தருவது என்பதும் சரியான நடவடிக்கை என சொல்வதற்கில்லை" என்றும் கூறியுள்ளார்.
இன்னும் 2 நாட்களில் இந்திய ரிசர்வ் வங்கி, பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகான தனது கடன்கொள்கை அறிவிப்பை வெளியிட உள்ள நிலையில், ஒய் வி ரெட்டியின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.