கார் விற்பனையை நிறுத்த ஃபோர்டு இந்தியா பரீசலனை செய்துவருகிறது. இதனால் தமிழ்நாட்டிலுள்ள அதன் ஆலையின் நிலை இனி என்னவாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கப்பட்டது. ஆனால், இத்தனை ஆண்டு காலம் இந்தியச் சந்தையில் இருந்தாலும், பெரிய அளவிலான வளர்ச்சியை ஃபோர்டால் அடைய முடியவில்லை. இந்தியாவில் விற்கப்படும் கார்களில் 2 சதவீததுக்கும் கீழான சந்தையை மட்டுமே ஃபோர்டு வைத்திருக்கிறது. அதுவும் ஃபோர்டு இகோ ஸ்போர்ட் மாடல் மட்டுமே சந்தையில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மற்ற வாகனங்கள் பெரிய அளவிலான விற்பனையை எட்டவில்லை.
ஆனால், இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் இரு பெரிய ஆலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மறைமலைநகரில் ஓர் ஆலையும், குஜாராத்தில் சனந்தில் ஓர் ஆலையும் உள்ளது. இரு ஆலைகளையும் சேர்ந்து ஆண்டுக்கு 4.4 லட்சம் வாகனங்கள் தயாரிக்க முடியும். ஆனால் ஜனவரி மாத விற்பனை சுமார் 4,000 வாகனங்கள் என்னும் அளவிலே இருக்கிறது. ஜூன் மாதத்தில் 2,800 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் கூட முழு உற்பத்தி திறனை எட்ட முடியவில்லை.
சென்னை ஆலை 350 ஏக்கரில் அமைந்திருக்கிறது. குஜாராத்தில் உள்ள ஆலை 460 ஏக்கரில் அமைந்திருகிறது. இந்த இரண்டு ஆலைகளுக்கும் சுமார் 200 கோடி டாலர் அளவுக்கு போர்டு முதலீடு செய்திருக்கிறது. ஏற்கெனவே போதுமான அளவுக்கு முதலீடு செய்துவிட்டதால் இனி மேலும் முதலீடு செய்யும் திட்டமில்லை என்றும் இந்த ஆலைகளை வேறு வழியில் பயன்படுத்தும் முயற்சியில் நிறுவனம் இருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதன் ஒரு முயற்சியாக ஒப்பந்த அடிப்படையில் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்களை தயாரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கபட்டது. ஆனால், ஃபோர்டுக்கும் மஹிந்திராவுக்கும் இடையேயான திட்டம் கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து எம்.ஜி. மோட்டார் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடந்தியது. அதிலும் முன்னேற்றம் இல்லை. அதனால் பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் (Citroen India) நிறுவனத்தின் வாகனங்களை உற்பத்தி செய்து கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.
இந்தச் சூழலில் இந்திய செயல்பாட்டை நிறுத்த இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய செயல்பாடு குறித்து தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஃபோர்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சிட்ரோன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடப்பதுபோல ஒப்பந்த அடிப்படையில் கார் தயாரிப்பது குறித்து ஓலா நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது. ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாக தெரிகிறது. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும் கூட ஃபோர்டு இந்தியா எதிர்காலம் கேள்விகுறி என்றே தோன்றுகிறது.
இந்திய கார் விற்பனையில் 70 சதவீத சந்தையை மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகிய இரு நிறுவனங்கள் வசம் மட்டுமே உள்ளன. மீதமுள்ள சுமார் 30 சதவீத சந்தையை பிடிப்பதற்குதான் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன.
- வாசு கார்த்தி