சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ள நிலையில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர். அதேநேரம், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் மழை பெய்து வருவதால் சந்தைக்கு பூக்களின் வரத்து பாதியாகக் குறைந்துள்ளதும் விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ இருபது ரூபாய்க்கு விற்ற ரோஜா இன்று 80 ரூபாய்க்கும், மல்லிகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரு கிலோ சாமந்திப்பூ 120 ரூபாய்க்கும், கனகாம்பரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வரும் நாட்களில் ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ள நிலையில், பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.