ஃபிளிப்கார்ட் சந்தை மதிப்பு ரூ.2.79 லட்சம் கோடி - வளர்ச்சியின் பின்புலம்
சில நாட்களுக்கு முன்பு ஃபிளிப்கார்ட் நிறுவனம் 360 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டியது. இந்த நிதி திரட்டலுக்கு பிறகு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,760 கோடி டாலராக (ரூ.2.79 லட்சம் கோடி) உயர்ந்திருக்கிறது. கனடா பென்ஷன் ஃபண்ட் இன்வெஸ்ட்மெண்ட் போர்டு, சாப்ட்பேங்க் விஷன் பண்ட், டைகர் குளோபல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 120 கோடி டாலர் அளவுக்கு வால்மார்ட் நிறுவனம் முதலீடு செய்தது. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2,490 கோடி டாலராக இருந்தது. ஒர் ஆண்டில் சந்தை மதிப்பில் பெரிய வளர்ச்சியை ஃபிளிப்கார்ட் அடைந்திருக்கிறது.
சமீபத்திய முதலீடு காரணமாக சந்தை மதிப்பு அடிப்படையில் சர்வதேச அளவில் முதல் 10 இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஃபிளிப்கார்டும் இடம்பிடித்திருக்கிறது என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க் நிறுவனம் தற்போது முதலீடு செய்திருக்கிறது. ஆனால் ஏற்கெனவே ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது. 2018-ம் ஆண்டு மொத்த பங்குகளையும் விற்றுவிட்டு வெளியேறிய சாப்ட்பேங்க் நிறுவனம் மீண்டும் முதலீடு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
இ-காமர்ஸ் துறை மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் வளர்ச்சியே தற்போதைய முதலீட்டுக்கு காரணம் என தெரிகிறது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் 2018-ம் ஆண்டு 2200 கோடி டாலர் சந்தை மதிப்பில் சர்வதேச ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் வாங்கியது. தற்போது ஃபிளிப்கார்டில் சுமார் 75 சதவீத பங்குகள் வால்மார்ட் வசம் இருக்கிறது.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாளர்களுக்கும் பங்குகள் உள்ளன. தற்போதைய முதலீட்டுக்கு பிறகு 600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பணியாளர்களிடம் வாங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம் சுமார் 6000 பணியாளர்கள் பயன் அடைவார்கள் என தெரிகிறது.