மாதர் குலத்தை போற்றும் மகளிர் தினத்தன்று இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் விஷமத்தனமான புரோமோஷன் ஒன்றை செய்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அது நெட்டிசன்களின் கண்ணில் பட அவர்கள் போஸ்ட் மூலம் செமையாக அடித்த அடியில் ஃப்ளிப்கார்ட் சமூக வலைதளத்தில் கிழித்து தொங்க விடப்பட்டுள்ளது. அதனால் தற்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது ஃப்ளிப்கார்ட்.
அப்படி என்ன செய்தது ஃப்ளிப்கார்ட்?
‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்ற காலம் மாறி பாலியல் சமத்துவம் ஏற்பட்டுள்ள நவீன யுகம் இது. இப்படியிருக்க மகளிர் தினத்தன்று இதை செய்துள்ளது ஃப்ளிப்கார்ட்.
“அன்பான வாடிக்கையாளர்களே, இந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் சமையலறை உபகரணங்களை 299 ரூபாய் முதல் பெறுங்கள்” என வாழ்த்து சொல்வது போல ஒரு புரோமோஷனல் மெசேஜை தட்டிவிட்டுள்ளது ஃப்ளிப்கார்ட். அது தான் நெட்டிசன்களின் கண்ணில் பட்டுள்ளது.
“பெண்கள் இருக்க வேண்டிய ஒரே இடமாக சமையலறையை ஃப்ளிப்கார்ட் பார்க்கிறதா?”, “சபாஷ் ஃப்ளிப்கார்ட்! சபாஷ்! நூற்றுக்கணக்கான பெண்கள் சமத்துவத்திற்காக சமூகத்தில் போராடி வருகிறார்கள். ஆனால் நீங்கள் சமையலறை உபகரணங்களுக்கு ஆஃபர் கொடுக்கிறீர்கள். பெண்கள் சமயலறைக்கு மட்டும் தானா?” என சில பயனர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர். இப்படியாக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் செயலை விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது ஃப்ளிப்கார்ட். “எங்கள் தவறுக்காக நாங்கள் வருந்துகிறோம். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் இதனை நாங்கள் செய்யவில்லை. முன்னதாக நாங்கள் பகிர்ந்த மகளிர் தின வாழ்த்து செய்திக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.