அடுத்த நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 12.8 சதவீதமாக இருக்கும் என தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் (Fitch) கணித்திருக்கிறது.
அடுத்த நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும் என முதலில் ஃபிட்ச் கணித்திருந்தது. தற்போது, சூழல் மேம்பட்டிருப்பதால் வளர்ச்சி விகிதத்தை ஃபிட்ச் உயர்த்தி இருக்கிறது. இந்தியாவைபோல துருக்கியும் வேகமாக வளர்ச்சி அடையும் நாடு என ஃபிட்ச் வகைபடுத்தி இருக்கிறது. 2020-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதாரம் வேகமாக மீண்டு எழுந்தது. எதிர்பார்க்கப்பட்டதை விட வேகமான வளர்ச்சி இருந்ததால் 11 சதவீதத்தில் இருந்து 12.8 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறோம் என ஃபிட்ச் தெரிவித்திருக்கிறது.
'2020-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறைந்தது. அதற்கு ஏற்ப பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கப்பட்டதால் வளர்ச்சி வேகமாக இருந்தது. இதில், கடந்த பட்ஜெட்டும் முக்கியத்துவம் பெறுகிறது. எதிர்பார்க்கப்பட்டதை விட நிதி நிலைமையை சரியாக கையாண்டிருந்தனர். மேலும், சுகாதாரம் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளில் முக்கிய முதலீடுகளை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. நிதி செலவுகளில் தாராளமாக இருப்பதால் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் அதற்கு ஏற்ப இருக்கும்.
தவிர, சேவை துறையின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் நுகர்வும் இருப்பதால் இந்த வளர்ச்சி சாத்தியமாக இருக்கும். கோவிட் காரணமாக 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருந்தது. அதனால், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. அதனால் இந்த வளர்ச்சி விகிதம் சாத்தியமாகும். ஜி-20 நாடுகளில் அதிக வளர்ச்சி விகிதம் இருக்கும் நாடு இந்தியாதான். அதேசமயம் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி குறைவாக இருப்பதினால், அடுத்த நிதி ஆண்டில் இயல்பாகவே அதிக வளர்ச்சி இருக்கும்' என்று ஃபிட்ச் தெரிவித்திருக்கிறது.
'அதேசமயம் 2023-ம் நிதி ஆண்டின் வளர்ச்சி 5.8 சதவீதமாக மட்டுமே இருக்கும். கோவிட்டுக்கு முன்பு, இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என கணித்தோமோ, அதைவிட கீழாகவே 2023-ம் நிதி ஆண்டின் வளர்ச்சி இருக்கும். மேலும், ரிசர்வ் வங்கி இதற்கு மேலும் வட்டி விகிதத்தை குறைக்க வாய்பில்லை' என பிட்ச் கணித்திருக்கிறது. வளர்ச்சி விகிதம் உயரும் வாய்ப்பு மற்றும் பணவீக்கத்தில் பெரிய சரிவு இருக்காது ஆகிய காரணங்களால் வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை.