ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்தி ஒருமாதம் முடியப்போகும் நிலையில் அந்த நிறுவனத்தின் சேவையை பெற்று வந்த வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் கோட் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.இதனால் அந்நிறுவனத்தின் மண்டல மாவட்ட சேவை மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் 1 கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்களை கொண்டு தொலைத்தொடர்பு சேவை வழங்கிய நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏர்செல் நிறுவனம். கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த ஏர்செல் திடீரென சேவையை நிறுத்திக்கொண்டதுடன் திவாலானதாக அறிவிக்க கோரி மனு கொடுத்துள்ளது. ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்தி ஒரு மாதம் முடியப்போகும் நிலையில், இந்நிறுவனத்தை நம்பியிருந்த வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் கோடு பெற முடியாமல் தவித்து வருகின்றனர். போர்ட் அவுட் கோட் வழங்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியுடன் முடியும் என்று கூறப்படும் நிலையில், ஏர்செல் மண்டல, மாவட்ட அலுவலகங்கள் முன் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
ஏர்செல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் போட்டியில், கடந்த வாரம் வரை சுமார் 15 லட்சம் பேர் ஏர்டெல் நிறுவனத்திற்கும், 10 லட்சம் பேர் வோடோபோன் நிறுவனத்திற்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சுமார் மூன்றரை லட்சம் பேரும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.