GIF வகை படங்களை உருவாக்கி வந்த ஜிபி நிறுவனத்தை ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியுள்ளது.
உலகளவில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் தளங்களில் GIF வகை படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. Graphics Interchange Format என்ற GIF வகை படங்கள் மூலம் பயனாளர்கள் தங்கள் எண்ணங்களை தெரிவிக்கின்றனர். ஃபேஸ்புக் கமெண்ட்களிலும், வாட்ஸ்அப்களிலும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த GIF வகை படங்களை ஜிபி (Giphy) என்ற நிறுவனமே உருவாக்கி வருகிறது. இந்நிலையில் ஜிபி நிறுவனத்தை ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியுள்ளது. சுமார் 400மில்லியன் டாலருக்கு (ரூ.3035 கோடி) ஜிபி நிறுவனத்தை ஃஃபேஸ்புக் வாங்கியுள்ளது. ஜிபி நிறுவன பணியாளர்கள் இன்ஸ்டாகிராமுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், ஜிபி நிறுவனம் இணைந்துள்ளதன் மூலம் ஃபேஸ்புக் பயனாளர்கள் மேலும் எளிமையாக GIF வகை படங்களை பயன்படுத்த முடியும். அதிக அளவிலான GIFகளை பதிவுகளுக்கு ஏற்ப கொடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் வசம் வந்தாலும் மற்ற சமூக வலைதளங்களில் GIFகளை பயன்படுத்துவதில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாது என்றும் ஃபேஸ்புக் தெளிவுப்படுத்தியுள்ளது.