இந்தியாவில் 10 லட்ச ரூபாய்க்குள் எலெக்ட்ரிக் கார்களை கொண்டுவருவது சாத்தியமில்லை என மாருதி சுசூகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Hisashi Takeuchi கூறியிருக்கிறார்.
இதுவரை எலெக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்தாத மாருதி நிறுவனம் வரும் 2025-ம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.
இந்த சூழலில் தற்போதைய டெக்னாலஜி விலையில் ரூ. 10 லட்ச ரூபாய்க்குள் எலெக்ட்ரிக் கார்கள் சாத்தியமில்லை என மாருதி தெரிவித்திருக்கிறது. தற்போது ஒரு காரின் மொத்த விலையில் 40 சதவீதம் அளவுக்கு பேட்டரிக்கு செலவாகிறது. பேட்டரியின் அளவை குறைத்தால் குறைந்த விலையில் கார்களை வழங்க முடியும். ஆனால் பேட்டரி அளவு குறைக்கப்படும் பட்சத்தில் செல்லும் தூரம் மிகவும் குறையும்.
இந்தியா முழுவதும் சார்ஜ் ஏற்றும் மையங்கள் மற்றும் நெட்வொர்க் அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறைந்த திறன் கொண்ட பேட்டரிகளை பொறுத்தமுடியும். ஆனால் தற்போது இது சாத்தியமில்லை. அப்படி பொறுத்தினால் வாடிக்கையாளர்கள் விரும்பமாட்டார்கள். சார்ஜ் ஏற்றும் மையங்களின் எண்ணிக்கை வரும் காலத்தில் அதிகரிக்கும் பட்சத்தில் கார்களின் விலை குறையும் வாய்ப்பு இருக்கிறது.
தற்போது எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் டாடா மோட்டர்ஸ் முன்னிலையில் இருக்கிறதே! மாருதி அந்த வாய்ப்பினை தவறவிட்டுவிட்டதா என்னும் கேள்விக்கு சில காலம் கவனம் செலுத்தாமல் இருந்தது உண்மைதான். ஆனால் கடந்த ஒர் ஆண்டாக இதில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறோம். இப்போதுதான் எலெக்ட்ரிக் கார்களின் சந்தை வளர்ந்துவருகிறது. அதனால் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் முதல் இடத்தை மாருதியால் பிடிக்க முடியும் என தெரிவித்தார்.
கடந்த நிதி ஆண்டில் 15198 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையானது. இதில் 85 சதவீதம் பங்கு டாடா மோட்டார் வசம் உள்ளது.