முதலாளி அல்லது உயர் அதிகாரியின் அரசியல், இ எம் ஐ, வருமான வரி... இந்த மூன்றையும் ஒரு சாமானிய சம்பளதாரர்களால் அத்தனை எளிதில் தவிர்க்க முடியாதவை. இதில் வருமான வரியை மட்டும் கொஞ்சம் திட்டமிட்டால் சில ஆயிரம் ரூபாய் தொடங்கி சில லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். அப்படி என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. இன்ஷூரன்ஸ் - சேஃப்டி ஃபர்ஸ்ட்
குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் கொரோனாவால் காலமானதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டதைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அப்படி ஒரு சிக்கலை நமது குடும்பத்துக்கு நாம் ஏற்படுத்திவிடக் கூடாது. எனவே முதலில் ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸை எடுத்துவிடுங்கள். இப்போது நீங்கள் வாங்கும் ஆண்டு சம்பளத்தை விட குறைந்தது 10 முதல் அதிகபட்சமாக 20 மடங்கு கூடுதல் தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்டு வருமானம் 10 லட்சம் என்றால் 1 கோடி ரூபாய் - 2 கோடி ரூபாய் எடுக்கவும்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பதால் புகை பழக்கம் இல்லாத 30 வயதுடைய நபர் ஒருவருக்கு, 1 கோடி ரூபாய் கவரேஜ் தொகைக்கே மாதம் 500 ரூபாய்க்குள் தான் பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும்.
செலுத்தும் பிரீமியம் தொகையை வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் காட்டி வரிச் சலுகை பெறலாம். நமக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் நம் குடும்பத்துக்கு கிடைக்கும் கிளெய்ம் தொகை முழுமைக்கும் வரி விலக்கு உண்டு. ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தும் இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெறலாம். இந்த முதலீடு நீங்கள் இல்லாத போது உங்கள் குடும்பத்தைக் காக்கும்.
2. ஹெல்த் இன்ஷூரன்ஸ் - பிரீமியம் தலை காக்கும்
கொரோனா காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரும் டிஸார்ஜ் செய்யப்படும் போது சில ஆயிரங்கள் தொடங்கி லட்சக் கணக்கில் பணம் செலுத்தினர்.
கொரோனா இரண்டாம் அலையின் போது மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளப்படுவதே பெரும்பாடாக இருந்தது. அப்படி மருத்துவம் சார்ந்த அதிரடி செலவுகளைத் தவிர்க்க, ஒரு நல்ல ஹெல்த் இன்ஷூரன்ஸை எடுத்துக் கொள்ளுங்கள்.
60 வயதுக்கு உட்பட்ட தனிநபர் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளுக்காக 25,000 ரூபாய் + 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோருக்கு 25,000 ரூபாய் என மொத்தம் 50,000 ரூபாய் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியமாகச் செலுத்தி அத்தொகைக்கு வரிச் சலுகை பெறலாம்.
ஒருவேளை தனிநபர் (நீங்கள்) 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, உங்கள் பெற்றோரும் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், உங்களுக்கு 50,000 + உங்கள் பெற்றோருக்கு 50,000 என மொத்தம் 1,00,000 வரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெறலாம்.
இன்று மருத்துவமனையில் சேர்ந்தாலே சில பல ஆயிரங்கள் தொடங்கி சில லட்சங்கள் கரைந்துவிடும் என்பதால், ஹெல்த் இன்ஷூரன்ஸை அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் பணத்தை அதிகரிக்கும் முதலீடல்ல, பணச் செலவைக் குறைத்து, சேமிப்பை பாதுகாக்கும் முதலீடு.
3. இஎல்எஸ்எஸ் திட்டம் - கொஞ்சம் எக்ஸ்ட்ரா
வரிச் சலுகையோடு வெறும் 7 - 8% வருமானம் போதவில்லை என்பவர்கள் ELSS - Equity Linked Savings Scheme மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
இந்த ஃபண்டில் முதலீடு செய்யப்படும் பணத்தில் குறைதபட்சம் 80% தொகை ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்யப்படும். எனவே, வருமான வரிச் சலுகை கிடைக்கும் முதலீட்டுத் திட்டங்களில், நமக்கு அதிக வருமானத்தைக் கொடுக்கும் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது இ எல் எஸ் எஸ் ஃபண்டுகள்.
இந்தியாவில் இருக்கும் இ எல் எஸ் எஸ் ஃபண்டுகளில் டாப் 10க்கும் மேற்பட்ட ஃபண்டுகள், கடந்த 5 ஆண்டுகளில் 11 சதவீதத்துக்கு மேல் வருமானம் கொடுத்திருக்கின்றன.
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளுக்கு பணத்தை எடுக்க முடியாது. 1 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபமாக ஈட்டும் போது மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) செலுத்த வேண்டும்.
பிபிஎஃப் போன்ற திட்டங்களில் லாக் இன் காலம் 15 ஆண்டுகள், அதை ஒப்பிடும் போது இ எல் எஸ் எஸ் லாக் இன் காலம் வெறும் 3 ஆண்டுகள். அதோடு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து ஈட்டும் வருமானத்தை ஈட்டலாம். எனவே வருமான வரியை சேமிக்க விரும்பும் நபர்கள் ELSS திட்டத்தை கட்டாயம் கையில் எடுக்க வேண்டும்.
4. சுகன்யா சம்ரிதி யோஜனா - பொன்மகள் வந்தாள்
இந்திய ஒன்றிய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வருமானம் (7.6%) வழங்கப்படும் திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா. மூத்த குடிமக்கள் டெபாசிட் திட்டத்துக்கு கூட 7.4% மட்டுமே வழங்கப்படுகிறது.
மகள் பிறந்த நாள் முதல் 10 வயது வரை எப்போது வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் இணையலாம். பெண் குழந்தைக்கு 21 வயது ஆகும் வரை இந்த கணக்கு செயல்பாட்டில் இருக்கும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் வட்டி கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும்.
பெண் குழந்தை 18 வயது நிறைவடைந்த பின் அவரது திருமணத்துக்கு முழு பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம். பெண் குழந்தையின் மேற்படிப்புக்கு கூட இதிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு நிதி ஆண்டில் 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் முதலீடு செய்யலாம்.
ஆண்டுக்கு 1.5 லட்சம் முதலீடு செய்யும் தொகைக்கு வரிச் சலுகை உண்டு. இந்த திட்டம் முதிர்ச்சி அடைந்த பிறகு கிடைக்கும் மொத்த தொகைக்கும் (மெச்சூரிட்டி தொகைக்கு) வரி செலுத்தத் தேவை இல்லை.
4. பி பி எஃப் - வங்கி எஃப் டி போல பாதுகாப்பானது
இந்திய அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களில் பொதுமக்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் மற்றொரு முக்கிய முதலீடு பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்ட் என்றழைக்கப்படும் பி பி எஃப். இதற்கு தற்போது ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
பி பி எஃப்-ல் முதலீடு செய்யப்படும் பணம், அதில் கிடைக்கும் வட்டி, முதிர்ச்சிக்குப் பிறகு கிடைக்கும் பணம் என அனைத்தும் வரிச் சலுகைக்குரியது.
ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்து 80 சியின் கீழ் வரிச் சலுகை பெறலாம். இந்திய அரசின் திட்டம் என்பதால் வங்கிகளை விட கொஞ்சம் பாதுகாப்பு அதிகம். இதில் உள்ள ஒரே சிக்கல் 15 ஆண்டு லாக் இன் காலம் தான். நீண்ட கால முதலீட்டுக்கு ஒரு பாதுகாப்பான இடம் தேவை என்பவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு: எல்லா திட்டங்களையும் சேர்த்து 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே வரிச் சலுகை பெற முடியும்.
-கெளதம்