நெருங்கும் பண்டிகைகள் - தயாராகும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மெகா தள்ளுபடி விற்பனைக்காக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
பண்டிகை என்றாலே முதலில் ஞாபகம் வருவது தள்ளுபடி தான். தீபாவளி காலங்களில் சிறிய கடை முதல் பெரிய கடைகள் வரை தள்ளுபடியை வாரி இரைக்கும். நேரில் சென்று வாங்கும் கடைகளுக்கு போட்டியாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் தள்ளுபடி கொடுக்கத்தவறுவதில்லை. விழாக்காலம் அல்லாத நாட்களிலேயே தள்ளுபடி தரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் விழாக்காலங்களுக்காக பெரிய திட்டங்களை வகுத்து வருகின்றன.
அதன்படி மெகா தள்ளுபடி விற்பனைக்காக விநியோக மையங்களை அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அமைத்து வருகின்றன. அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்கள் வருகிற 10ஆம் தேதி முதல் பண்டிகைக்கால சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்கு தயாராகி வருகின்றன. தள்ளுபடி விற்பனை நாட்களில் லட்சக்கணக்கானோர் பொருட்களை ஆர்டர் செய்வார்கள் என்பதால், நாடு முழுவதும் அமேசான் நிறுவனம் 50 ஆயிரம் தற்காலிக விநியோக மையங்களை ஏற்படுத்தி வருகிறது. 50 முக்கிய மையங்களில் இருந்து 150 டெலிவரி குடோன்களுக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து 50 ஆயிரம் விநியோக மையங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆன்லைன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. .