தடுப்பூசி போட்டுக்கொண்ட உள்நாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று தேவையில்லை என மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையில் ஏற்பட்ட பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 52 நாட்களுக்குப் பிறகு 15 லட்சத்திற்கு கீழ் குறைந்திருக்கிறது.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல விமான நிலையங்களில் கொரோனா நெகட்டிவ் சான்று தேவை என்ற விதிமுறையை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று முறையை ரத்து செய்வது பற்றி பல்வேறு துறைகளுடன் ஆலோசித்து வருவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துகளும் கேட்கப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.