பொருளாதாரத்தின் மந்தநிலை காரணமாகவும், ஸ்டீரிமிங் பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளதின் காரணமாகவும், தங்கள் நிறுவனத்தின் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவதாக அறிவித்துள்ளது, பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி.
கொரொனா காலத்திற்கு பிறகு பொருளாதாரத்தின் மந்த நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றன. பேஸ்புக், டிவிட்டர், கூகுள், பைஜுஸ், மைக்ரோசாப்ட் என தொடர் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து, வால்ட் டிஸ்னி நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னியின் சிஇஒ பாப் இகர், புதன்கிழமை அன்று டிஸ்னியின் காலாண்டு வருவாய் குறித்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, அந்நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்தார். 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த அவர் கூறுகையில், “ நான் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை, உலகெங்கிலும் உள்ள எங்கள் ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் பாராட்டும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
டிஸ்னியின் ஸ்டீரிமிங் பயன்பாட்டாளர்கள், கடந்த 3 மாதங்கள் இருந்ததை விட எண்ணிக்கையில் ஒரு சதவீதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் டிஸ்னி வர்த்தகத்தில் பெரிய இழப்பீட்டை சந்திக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், பங்குவிலையானது 8 சதவீதம் அதிகரித்தே காணப்பட்டுள்ளது முதலீட்டாளர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.
கடந்த 20 வருடங்களாக டிஸ்னியின் சிஇஒ-வாக இருந்த பாப் வாகர், 2020 பிற்பாதியில் பதவியிலிருந்து விலகிய நிலையில், பாப் சாபெக் சிஇஒ-வாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவரது நியமனத்திற்கு பிறகு அதிக முதலீடுகள் செய்யப்பட்டாலும், தொடந்து டிஸ்னியின் வர்த்தகமானது வீழ்ச்சியையே சந்தித்துவந்த நிலையில் பாப் சாபெக் வெளியேற்றப்பட்டு, மீண்டும் பாப் வாகர் சிஇஒ-வாக பொறுப்பேற்று கொண்டார்.
டிஸ்னியின் முதலீட்டாளரான நெல்சன் பெட்ஸ், 20th Century Fox திரைப்பட ஸ்டுடியோவை வாங்குவதில் டிஸ்னி அதிகப்பணம் விரையம் செய்ததாக விமர்சித்ததை அடுத்து, அதை ஈடுகட்டவும், பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யவும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது டிஸ்னி நிறுவனம்.
டிஸ்னியின் 2021ன் அறிக்கையின்படி, 2021 அக்டோபர் மாதம் வரை உலகளவில் 1,90,000 பேர் பணிபுரிந்துவருகின்றனர். அதில் 80 சதவீதம் பேர் முழுநேர வேலையாட்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கொரானா காலத்தில் எடுக்கப்பட்ட பணியார்களை மட்டும் வெளியேற்ற முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. எந்த குழுவை டிஸ்னி வெளியேற்ற போகிறது என்ற குழப்பத்தில் அதன் பணியாளர்கள் இருந்துவருகின்றனர்.