அமெரிக்காவின் முக்கியமான டெலிகாம் நிறுவனம் ஏடி அண்ட் டி (AT and T). இந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வார்னர் நிறுவனத்தை வாங்கியது. இந்த நிலையில், இந்தப் பிரிவை மட்டும் தனியாக பிரித்து டிஸ்கவரி நிறுவனத்துடன் இணைத்து புதிய நிறுவனமாக மாற்ற இருக்கிறது.
இந்தப் புதிய நிறுவனத்தின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்தப் புதிய நிறுவனத்தில் 'ஏடி அண்ட் டி' நிறுவனத்துக்கு 71 சதவீத பங்குகளும், டிஸ்கவரி நிறுவனத்துக்கு 29 சதவீத பங்குகளும் இருக்கும். தற்போது வார்னர் மீடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜேசன் கிலர் புதிய நிறுவனத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர இயக்குநர் குழுவில் 13 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
இரு நிறுவனங்களிலும் தனித்தனியாக மீடியா உரிமங்கள் உள்ளன. ஒன்றாக இணையும்போது பெரிய நிறுவனமாக மாற முடியும் என இரு நிறுவனங்களும் கூட்டாக தெரிவித்திருக்கின்றன. அடுத்த ஆண்டுக்குள் இந்த இணைப்பு முழுமையாக முடியும் எனத் தெரிகிறது. இதன்மூலம் டிஸ்னி, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டி போட முடியும். இந்த இரு நிறுவனங்கள் கன்டென்ட் உருவாக்கத்துக்கு இதுவரை தனித்தனியாக செலவு செய்தன. இணையும் பட்சத்தில் கன்டென்ட்டுக்கு அதிகம் முதலீடு செய்யும் நிறுவனமாக இது இருக்கும். புதிய நிறுவனம் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது. ஆனால், நெட்பிளிக்ஸ் 17 பில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்கிறது.
மேலும், டிஸ்கவரி குழுமத்துக்கு 1.5 கோடி சப்ஸ்கிரைபர்களும், வார்னர் பிரதர்ஸ் (ஏடி அண்ட் டி) நிறுவனத்துக்கு சர்வதேச அளவில் 6.4 கோடி சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர். நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு 20.7 கோடியும், டிஸ்னிக்கு 10.3 கோடி சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர்.
டிஸ்கவரி குரூப் - அனிமல் பிளானட், டிஎல்சி, டிஸ்கவரி, ஹெச்ஜிடிவி, புட் உள்ளிட்ட சில சேனல்கள்; ஏடி அண்ட் டி - ஹெச்.பி.ஒ (கேம் ஆப் த்ரோன்ஸ்), ஹெச்.பிஓ மேக்ஸ், சிஎன்என், டிஎன்டி, கார்ட்டூன் நெட்வொர்க், வார்னர் பிரதர்ஸ் (ஹாரி பார்டர், பேட்மேன்) உள்ளிட்ட முக்கிய சேனனல்களும் முக்கிய பிரான்ஸைசிகளும் உள்ளன.
அமேசான் பிரைம் மற்றும் எம்ஜிஎம்
இந்த இணைப்பு நடந்த சில நாட்களில் மற்றொரு ஒ.டி.டி நிறுவனமாக அமேசன் பிரைம் முக்கிய நிறுவனத்தை வாங்குவதாக தெரிகிறது. முக்கிய சினிமா தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம் (Metro Goldwyn Mayer) நிறுவனத்தை வாங்க இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் சீரியஸ் உள்ளிட்ட 4000-க்கும் மேற்பட்ட படங்களின் உரிமை எம்ஜிஎம் நிறுவனம் வசம் உள்ளது. தவிர, டெலிவிஷன் நிகழ்ச்சிகளும் (17000 மணி நேரம்) உள்ளன.
9 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இணைப்பு குறித்த அதிகாரபூர்வமாக எந்த நிறுவனமும் அறிவிக்கவில்லை. ஆனால், எம்.ஜி.எம். நிறுவனத்தை விற்கப் போகிறோம் என கடந்த டிசம்பரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மீடியா துறையில் 80 பில்லியன் டாலருக்கு மேலான பரிவர்த்தனைகள் இந்த ஆண்டில் நடந்திருப்பதாக புளூம்பெர்க் தெரிவித்திருகிறது. கடந்த சில ஆண்டுகளாக எம்.ஜி.எம் நிறுவனத்தை வேறு நிறுவனம் கையகப்ப்படுத்தும் என்னும் பேச்சுகள் இருந்தன. 2019 ஆப்பிள் நிறுவனம் எம்.ஜிஎம். நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், அந்தப் பேச்சு வார்த்தை வெற்றிபெறவில்லை. அமேசான் பிரைமில் இணையுமா என்பது விரைவில் தெரியவரும். ஆனால், மீடியா துறை பரபரப்பாகவே இயங்கி வருகிறது.
- வாசு கார்த்தி