ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் தினசரி 12 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளன. இதனால் பெட்ரோல், டீசலின் விலை மீண்டும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல்,டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. விலையேற்றம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 90 ரூபாய் வரை சென்றது. இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை பீதியடையச்செய்தது.
இதற்கிடையே கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ள அதே வேளையில் அதை பயன்படுத்தும் அளவுக்கு பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இருக்காது என வெளியான தகவல்களே விலை வீழ்ச்சிக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த சில நாட்களாக இறக்கம் காணப்பட்டது.
இந்நிலையில் ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் தினசரி 12 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளன. ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற ஓபெக் நாடுகள் கூட்டத்திற்கு பின் அதில் உறுப்பினராக உள்ள ஈராக் இத்தகவலை தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் இம்முடிவு வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என ஈராக் அமைச்சர் தாமர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும் என்ற தகவல் வெளியான உடனேயே சர்வதேச சந்தையில் அதன் விலை 5% கூடியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கச்சா எண்ணெய் விலையில் சரிவு இருந்ததால் பெட்ரோல்,டீசல் விலைகளும் குறைந்து வந்தன. ஆனால் ஓபெக் அமைப்பின் அறிவிப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசலின் விலை மீண்டும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது