ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளரின் வைப்புத் தொகையின் வட்டியை கால் சதவிகிதம் குறைத்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் பதவிக்காலம் முடியும் முன் தனது சொந்தக்காரணங்களுக்காக விலகுவதாக கூறி ராஜினாமா செய்தார். இதனால் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி ஏற்றார். சக்திகாந்த தாஸ் பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்து மூன்று நிதிக் கொள்கைகளில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை முக்கால் சதவிகிதம் வரை குறைத்துள்ளார். இதனால் வீடு, வாகன, தொழிற் கடன் வட்டி குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் வங்கிகள் சில வைப்புத் தொகையின் வட்டியை குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி, வங்கி கடன்களுக்கான வட்டியை குறைத்த சில தினங்களிலேயே ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் போன்ற சில தனியார் வங்கிகள், வாடிக்கையாளார்களின் டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைத்ததுள்ளன. முன்னணி தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, வாடிக்கையாளர்களின் டெபாசிட் வட்டியை 0.10 முதல் 0.25 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. அதேபோல ஆக்ஸிஸ் வங்கியும் பல்வேறு டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தை 0.15% வரை குறைத்துள்ளது.
இதனைதொடர்ந்து ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால், வங்கி டெபாசிட் வட்டியை மட்டுமே நம்பியுள்ள ஓய்வு பெற்றவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் சற்று பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் வங்கிகள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித்தை குறைத்திருப்பது, வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றிற்கான வட்டியை குறைப்பதற்கு முந்தைய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.