கிரிப்டோகரன்சி எனப்படும் இணையவழி மெய்நிகர் பணப்பரிவர்த்தனை இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. இது சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை அமைச்சகம், கிரிப்டோகரன்சி எனப்படும் இணையவழி மெய்நிகர் பணப்பரிவர்த்தனை இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, இத்தகைய கிரிப்டோகரன்சி வழியாக நடைபெறும் பண பரிவர்த்தனைகளை பண மோசடி தடுப்பு, நிதித்துறை சார்ந்த தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டம், FEMA எனப்படும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
வங்கிகள் உள்ளிட்டவை இது சம்பந்தமான பணப்பரிவர்த்தனை குறித்த விவரங்களை விரிவான முறையில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளபட்டிருப்பதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-நிரஞ்சன் குமார்