இந்தியாவில் பெட்ரோல் விலை பல மாநிலங்களில் 100 ரூபாயை தொட்டிருக்கிறது அல்லது ரூ.100-க்கு மிக அருகில் இருக்கிறது. மேலும் டீசல் விலையும் தொடர்ந்து உயரந்து வருகிறது. இந்த நிலையில், சி.என்.ஜி (Compressed Natural Gas) வாகனங்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது.
இந்திய கார் சந்தையில் பெரும் பங்கு வைத்திருக்கும் மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் சி.என்.ஜி வாகன தயாரிப்பை துரிதப்படுத்தி இருக்கின்றன. இரு நிதி ஆண்டுகளுக்கு முன்பு மாருதி நிறுவனம் 1000 என்னும் அளவிலே சி.என்.ஜி வாகனங்களை தயாரித்தது. கடந்த நிதி ஆண்டில் 1.6 லட்சம் என்னும் அளவில் இந்த வகை வாகனங்களின் உற்பத்தி இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் 2.5 லட்சத்துக்கு மேல் சி.என்.ஜி. வாகனங்களை தயாரிக்க மாருதி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
அதேபோல ஹூண்டாய் நிறுவனமும் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அளவுக்கு இந்த வாகன தயாரிப்பை உயர்த்தி இருக்கிறது. நடப்பு ஆண்டில் சுமார் 35,000 வாகனங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு முக்கியமான காரணம். அதேபோல, தற்போது சி.என்.ஜி. கேஸ் கிடைப்பதில் பெரிய சிக்கல் இல்லை. பெரும்பாலான நகரங்களில் கிடைப்பதால் இந்த வகையான வானங்களை வாங்க மக்கள் ஆர்வம் காண்பிப்பதாக தெரிகிறது.
ஆனால் சி.என்.ஜி. கார்கள் ஆரம்பகட்ட மாடல்களில் மட்டுமே இருக்கின்றன. மாருதியில் எட்டு மாடல்களில் சி.என்.ஜி. கார்கள் கிடைக்கின்றன. ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, வேகன் ஆர் உள்ளிட்ட மாடல்களில் சி.என்.ஜியிலும் கிடைக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனம் மூன்று மாடல்களில் சி.என்.ஜி. கார்களை தயாரிக்கிறது. ஆரா, சாண்ட்ரா மற்றும் நியாஸ் ஆகிய மாடல்களில் சி.என்.ஜி. கார்கள் உள்ளன. இதர மாடல்களுக்கு தேவை ஏற்பட்டால் அந்த மாடல்களிலும் சி.என்.ஜியை கொண்டுவருவோம் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், சிறிய கார்களில் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜியிலும், பெரிய மற்றும் எஸ்.யு.வி ரக கார்களில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என ஹூண்டாய் தெரிவித்திருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதால் சி.என்.ஜியில் இயக்குவது லாபமாக இருக்கிறது. சி.என்.ஜி மூலம் செயல்படும் கார்களில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1.70 செலவாகிறது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ4-க்கு மேல் செலவாகிறது எனத் தெரிகிறது. ஒரு கிலோ சி.என்.ஜி விலை 44 என்னும் அளவில் தலைநகர் டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது இந்த கார்கள் கணிசமான அளவில் விலை குறைவாகவும் கிடைக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1,400 என்னும் அளவில் சி.என்.ஜி நிலையங்கள் இருந்தன. ஆனால், தற்போது 3400 என்னும் அளவில் சி.என்.ஜி. நிலையங்கள் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10000 ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இருக்கும் விலையே தொடரும் பட்சத்தில் எலெக்ட்ரிக் வானங்களை விட சி.என்.ஜி வாகனங்களுக்கு சந்தையில் தேவை உயரும் என்றே தோன்றுகிறது.
தகவல் உறுதுணை: The Economic Times