ரூ.120-க்கு விற்ற ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ.85 ஆக சரிந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர், தாரமங்கலம் பகுதிகளில் கொப்பரை தேங்காய் விலை கிலோவிற்கு 35 ரூபாய் வரை சரிந்துள்ளது. அதனால், கொப்பரை தேங்காய் பருப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மட்டுமின்றி ஈரோடு, பல்லடம், கோபிசெட்டிப்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து தேய்காய்களை வாங்கி விவசாயிகள் கொப்பரையாக மாற்றி எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதே ஓமலூர் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகளின் பிரதான தொழிலாக உள்ளது.
இந்த சூழலில் தேங்காய் அறுவடை அதிகரித்து, கொப்பரை உற்பத்தி வேகமாக நடைபெற்று வருவதால், அதன் விலை சரிவடைந்துள்ளது. அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ கொப்பரை தற்போது 85லிருந்து 90க்கு மட்டுமே விலை போவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.