துவரம்பருப்பு விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் அதன் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
துவரம்பருப்பு விலை கடந்த ஓராண்டில் 15 முதல் 20% வரை அதிகரித்து கிலோ 200 ரூபாயை தொட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் துவரம் பருப்பிற்கு பதிலாக வேறு பருப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக இந்திய பருப்பு மற்றும் தானியங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் தெற்கு இந்திய பகுதிகளில் துவரம் பருப்பிற்கு பதிலாக பச்சைப் பயிரை பலர் பயன்படுத்துவதாக அந்த அமைப்பின் உறுப்பினர் அங்குஷ் ஜெயின் தெரிவித்தார். கொண்டைக்கடலை பயன்பாடும் சில மாதங்களாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் துவரம் பருப்பு பயன்பாடு குறைந்துள்ளதாக மும்பையை சேர்ந்த பருப்பு வகைகள் இறக்குமதியாளர் சதீஷ் உபாத்யாயா தெரிவித்தார்.
அரசின் டெண்டர்களில் கூட துவரம் பருப்பிற்கு பதில் பச்சைப் பயிறு என குறிப்பிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். துவரம் பருப்பை விட பச்சைப் பருப்பின் விலை 40% குறைவு என்பதால் அதன் தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் வருடாந்திர துவரம்பருப்பு தேவை சுமார் 45 லட்சம் டன்னாக உள்ள நிலையில் அதன் உள்நாட்டு உற்பத்தி சுமார் 30 லட்சம் டன்கள் மட்டுமே. இறக்குமதி மூலம் பற்றாக்குறையை அரசு சரிக்கட்டி வருகிறது.