லடாக் எல்லை, அருணாச்சலப் பிரதேச எல்லை, சிக்கிம் எல்லை என இந்தியா - சீனா இடையே எப்போதும் எல்லைப் பிரச்னைதான். உலகிலேயே மிக நீண்ட நில எல்லையைக் கொண்டிருக்கும் நாடு சீனா. இந்தியாவும் சீனாவும் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீள எல்லையைக் கொண்டிருக்கின்றன. இந்த எல்லைக் கோடானது கிழக்கு, மத்திய, மேற்கு என மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இந்த எல்லையைப் பொறுத்தவரை தற்போதைய லடாக், சிக்கிம் மாநிலம், அருணாசலப் பிரதேசம் ஆகியவை அவ்வப்போது பிரச்னைக்குரிய களங்களாக மாறிவிடுகின்றன.
அதுவும் சமீப ஆண்டுகளாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உரசல் போக்கு வலுத்து வருகிறது. லடாக் எல்லைப் பிரச்னை, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் என இருநாடுகளுக்கும் இடையே பிரச்னை அதிகரித்து வருகிறது. பிரச்னைக்கு காரணம், இந்திய எல்லைகளை சீனா ஆக்கிரமிப்பு செய்வதே. இதை பல முறை தட்டிக்கேட்டும் சீனா திருந்தியபாடில்லை. இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின் சீனாவை பொருளாதார ரீதியாக அடக்கிவைக்க சில நடவடிக்கைகளை எடுத்தது.
பப்ஜி போன்ற சீன செயலிகளை அதிரடியாக தடை செய்த சம்பங்களும் அரங்கேறின. இதன்பின்பும், அடிக்கடி கடுமையான சண்டை, அருணாச்சல எல்லையில் மூன்று கிராமங்களை உருவாக்கிய சீனா, என அத்துமீறல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்படியாக, எல்லை பதற்றங்களுக்கு மத்தியிலும் சீனா இந்தியாவின் சிறந்த வர்த்தக கூட்டாளியாக இருக்கிறது என்கிறது ஒரு தரவு.
இந்தியாவின் வர்த்தக அமைச்சகத்தின் தற்காலிக தரவுகளின்படி, சீனாவுடனான இருவழி வர்த்தகம் கடந்த ஆண்டு 77.7 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டின் வர்த்தகம் 85.5 பில்லியன் டாலரைவிட குறைவாக இருந்தபோதிலும் சீனாவே இந்தியாவின் ஒரு பெரிய வணிக கூட்டாளியாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று, எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் இது சாத்தியமாகியுள்ளது.
சாத்தியமானத்துக்கு காரணம், இவ்வளவு சிக்கல்களுக்கு இந்தியா தொடர்ந்து சீனத் தயாரிக்கப்பட்ட கனரக இயந்திரங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்தது. இதன் விளைவாக, சீனாவுடனான இருதரப்பு வர்த்தக இடைவெளி 2020-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலராக இருந்தது. இது மிகப் பெரியது. சீனாவிலிருந்து மொத்த இறக்குமதி 58.7 பில்லியன் டாலர்கள் ஆகும். இறக்குமதியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா மற்றும் அரபுநாடுகள் இருந்து வருகின்றன.
இதற்கிடையே, 51% கனரக இயந்திரத்தை இந்திய தனது அண்டை நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் தேவை இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியா தனது ஆசிய அண்டை நாடுகளிடமிருந்து இறக்குமதியைக் குறைத்தது. அதேநேரம், சீனாவுக்கான ஏற்றுமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட சுமார் 11% அதிகரித்து கடந்த ஆண்டு 19 பில்லியன் டாலர்களாக உயர்த்த முடிந்தது. சீனாவுடனான பதற்றமான உறவுகள் ஏற்கெனவே இந்தியாவின் உற்பத்தி திறன்களை உயர்த்துவதற்கான லட்சியங்களை எடைபோட்டுள்ளன.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உற்பத்தி - இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் அல்லது பி.எல்.ஐ என அழைக்கப்படும் தொழிற்சாலைகளை அமைக்க தைவானிய நிறுவனங்களுக்கு உதவ தேவையான சீன பொறியியலாளர்களுக்கு விசா வழங்குவதில் இந்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதனால் உள்ளூர் உற்பத்தி பாதிக்கும் அபாயம் இருக்கிறது.