கொரோனா பெருந்தொற்றால் மந்தமாக காணப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள் கட்டுமானத்துறையினர்.
நினைத்துப் பார்க்க முடியாத பேரிழப்பை ஏற்படுத்திவிட்டு இன்னும் அச்சுறுத்துக் கொண்டே இருக்கிறது கொரோனா பெருந்தொற்று. இதனால், பெரும்பாலான தொழிற்துறைகள் மீள முடியாத பாதிப்பைச் சந்தித்தன. அதில் கட்டுமானத்துறையும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது என்றே கூறலாம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், முடிச்சூர், தாம்பரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 2018-19ஆம் ஆண்டு நிலவரப்படி 50 ஆயிரத்தில் இருந்து 65 ஆயிரம் குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் பெருந்தொற்று பரவத் தொடங்கிய 2020ஆம் ஆண்டில் 20 ஆயிரம் வீடுகள் மட்டுமே விற்பனை செய்வதே சிரமாக இருந்திருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு பொதுமுடக்க தளர்வுகள் அளிக்கப்பட்டு தமிழ்நாடு மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருவதால், அடுக்கு மாடி குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள் கட்டுமானத்துறையினர்.
சென்னையோ, அதன் சுற்றுப்புறத்திலோ ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டுமென்றால் 40 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதிலும் வங்கியில் கடன் வாங்கி மாதத் தவனை திட்டத்தில் வீடு வாங்குவோர் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. வங்கிகள் நிர்ணயிக்கும் வட்டித் தொகையே அதிகமாக இருக்கும் சூழலில், வீடு வாங்கும்போது 5 சதவிகிதம் ஜிஎஸ்டி தொகை செலுத்த வேண்டியிருப்பதால் சிரமத்தை சந்திப்பதாகக் வேதனை தெரிவிக்கிறார்கள் சாமானியர்கள். இதில் வட்டி மற்றும் ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கை.