பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் சுயசார்பு நிதித் திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின் 2024ஆம் ஆண்டு டிசம்பர் வரை கடன் வழங்கும் நடவடிக்கைகளைத் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிணை இல்லாத குறைந்த வட்டியிலான கடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரித்தல் மற்றும் சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முழுமையான சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம், சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் பிணையில்லா கடன்கள் வழங்கப்படுகின்றன. 5,000 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது 8,100 கோடி ரூபாய் கடன் தொகையாக அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு அவர்களின் வணிகத்தை மேலும் விரிவுபடுத்தவும், அவர்களை தன்னிறைவு அடைபவராகவும் மாற்றுவதற்கான மூலதனத்தை வழங்குகிறது. விற்பனையாளர்களுக்கு கேஷ்பேக் உட்பட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான பட்ஜெட் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் 1.2 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் சுயசார்பு நிதித் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 31.9 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டு, அவற்றில் 29.6 லட்சம் பேருக்கு கடனாக 2,931 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2-வது கடனைப் பொருத்தவரை, 2.3 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டு, 1.9 லட்சம் பேருக்கு 385 கோடி ரூபாய் கடன் தொகையாக வழங்கப்பட்டுள்ளன. பயனாளிகளான சாலையோர வியாபாரிகள் 13.5 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு 10 கோடி ரூபாய் கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ளது. வட்டி மானியமாக 51 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.