வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி தொடர்ந்து 3ஆவது முறையாக 0.25% குறைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்ட முடிவில் வட்டிக்குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதமான ரெப்போ 6 சதவிகிதமாக உள்ள நிலையில் அது 5.75 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பணவீக்கம் 3லிருந்து 3.1 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளது. 6 மாதங்களில் 3 முறையாக முக்கால் சதவிகிதம் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயனை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் வங்கிகள் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
சக்திகாந்ததாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 3 நிதிக்கொள்கை கூட்டங்களிலும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.