அனைத்து ’நெட்வொர்க்’களுக்கும் இலவசமாக பேசலாம்: ஜியோ அறிவிப்பின் பின்னணி என்ன?

அனைத்து ’நெட்வொர்க்’களுக்கும் இலவசமாக பேசலாம்: ஜியோ அறிவிப்பின் பின்னணி என்ன?
அனைத்து ’நெட்வொர்க்’களுக்கும் இலவசமாக பேசலாம்: ஜியோ அறிவிப்பின் பின்னணி என்ன?
Published on

நாளை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து நெட்வொர்க்களுக்கும் இலவசமாக பேசலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன என்று பார்ப்போம்?

அறிமுகமானது முதலே பல அதிரடி சலுகைகளை அறிவித்து குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சியடைந்தது ஜியோ, இந்த நிறுவனத்துடன் போட்டியை சமாளிக்க முடியாமல் பல நெட்வொர்க்குகள் மூடப்பட்டன, சில நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவில் சிக்கியிருக்கிறது. ஆரம்பத்தில் மிகக்குறைவான கட்டணம் வசூலித்த ஜியோ, படிப்படியாக கட்டணத்தை உயர்த்தி வருகிறது. முதலில் டேட்டாவுக்கு மட்டுமே கட்டணம், வாய்ஸ் அழைப்புகளுக்கு கட்டணமே இல்லை என்று சொன்னது ஜியோ. ஆனால் கடந்த ஆண்டு முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்-களுக்கு பேச கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது.

இதற்கு காரணமாக ஜியோ சொன்னது ICU(Interconnect Usage Charge) என்ற தொகை. அதாவது ஒரு நெட்வொர்க் நிறுவனத்திலிருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு அழைக்கும்போது, அந்த நெட்வொர்க்கிற்கு செலுத்தவேண்டிய தொகை. உதாரணமாக ஜியோ விலிருந்து ஏர்டெல்லுக்கு அழைத்தால், ஜியோ நிறுவனம் ஏர்டெல்லுக்கு ஐசியு கட்டணம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக டிராயிடம்(TRAI) ஆரம்பம் முதலே ஜியோ எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, ஆனால் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் ஐசியு கட்டணத்தை நிமிடத்திற்கு 30 பைசாவாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இறுதியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிராய் ஒரு நிமிடத்திற்கான ஐசியு கட்டணத்தை 6 பைசா என அறிவித்தது. இதன்பிறகு இந்த பிற நெட்வொர்க்-களுக்கான ஐசியு கட்டணமான 6 பைசாவை இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்தே வசூலித்து வந்தது ஜியோ.

இந்த சூழலில்தான் தற்போது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மற்ற நெட்வொர்க்களுக்கான ICU(Interconnect Usage Charge) கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக டிராய் அறிவித்துள்ளது, அதனால் தற்போது ஜியோவும் தங்களுக்கான ஐசியு கட்டணத்தை ரத்து செய்துள்ளது.

விவசாயிகள் போராட்டமும், ஜியோவும்:

டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவரும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஜியோ சிம்மை புறக்கணித்து வருகின்றனர், பஞ்சாப், ஹரியானாவில் நூற்றுக்கணக்கான ஜியோ டவர்களையும் விவசாயிகள் சேதப்படுத்தியுள்ளதாக ஜியோ புகார் அளித்துள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பும் இந்த பிற நெட்வொர்க்-கள் கட்டண நீக்க அறிவிப்பின் பின்னால் இருக்குமோ என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com