முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராத புகாரில் 19 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வர்த்தகத் தடை விதித்து செபி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வர்த்தக தலைநகரமான மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. பங்கு பரிவர்த்தனை நடைபெறும் பங்கு சந்தையை ‘செபி’ கட்டுப்படுத்துகிறது. பங்கு சந்தை வர்த்தகம் தொடர்பாக எழும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது.
இந்நிலையில், தொழில்நுட்ப துறைகளை சேர்ந்த 19 நிறுவனங்களுக்கு வர்த்தகத் தடை விதித்து செபி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராதது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐ.ஓ.எல். நெட்காம் லிமிடெட், சிண்டில்லா சாப்ட்வேர் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெலிடேடா இன்பர்மேடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் இந்த பட்டியலில் உள்ளது.
முன்னதாக, மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சுமார் 200 நிறுவனங்கள் 10 வருடத்திற்கு எவ்விதமான வர்த்தகமும் செய்ய முடியாத அளவிற்கு செபி கடந்த வாரம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.