அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!

அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
Published on

பெரும்பாலான மக்கள் சமையலுக்கு பயன்படுத்துவது எல்பிஜி சிலிண்டர்தான். அந்த சிலிண்டரின் விலை மக்களை பயமுறுத்துகிறது. அவ்வப்போது விலை ஏற்றம் என்ற காலம் மாறி, மாதத்திற்கு மூன்று முறை விலை ஏறிய சம்பவங்கள் கடந்த மாதம் அரங்கேறியது. இந்நிலையில், இன்றும் ரூ.25 விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 810 லிருந்து 835 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறையாக சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், மார்ச் 1ஆம் தேதியான இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.835 ஆக அதிகரித்துள்ளது.

மானியம் என்பது இருந்தாலும், அதுவும் சரியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்ற சிக்கலெல்லாம் உள்ளது. ரூ.1000 தனியாக சிலிண்டருக்கு ஒதுக்கி வைக்க வேண்டுமென்பதே குடும்பத்தினரின் இன்றைய நிலை. இது ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினருக்கு உள்ளதுபடியே அதிர்ச்சிதான். மக்களின் நலனை கருத்தில்கொண்டு சிலிண்டரின் விலையை குறைக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அதேவேளையில், நம்மால் முடிந்தவரை சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்வதும் நமக்கு லாபமே. வழக்கமாக 30 நாள்கள் வரும் சிலிண்டர் என்றால், சிக்கனத்தை கடைபிடித்தால் 40 நாள்கள் வரை நீடிக்கலாம். சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது பெரிய சாகசமெல்லாம் இல்லை. சிறு சிறு கவனம் எடுத்துக்கொண்டாலே போதும். சரி, என்னவெல்லாம் செய்யலாம்? - பார்க்கலாம்...

1. அடுப்பு பராமரிப்பு: முதலில் உங்களது அடுப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை கண்காணிக்க வேண்டும். கேஸ் செல்லும் குழாய்களை சரிசெய்துகொள்ள வேண்டும். மிகச்சிறிய அளவிலான ஓட்டைகள் மூலம் பாதிப்பு ஏற்படாதவாறு கேஸ் வெளியாகும். இதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் கேஸ் வீணாகும். அதனால், அடுப்பை சரியான இடைவெளியில் முறையாக பராமரிக்க வேண்டும்.

2. பாத்திரத்தை தயார் செய்தல்: சிலர் பாத்திரத்தை கழுவிவிட்டு நேரடியாக ஈரத்துடன் அடுப்பில் வைப்பார்கள். அந்த ஈரம் காய்வதற்கே அடுத்து சில நிமிடங்கள் எரிய வேண்டிவரும். தரமான சுத்தமான தனி காட்டன் துணிகளை ஈரத்தை துடைக்க பயன்படுத்தலாம். ஈரத்தை துடைத்தபிறகு அடுப்பில் நேரடியாக சமையலுக்கு இறங்கலாம். இதன்மூலம் சில நிமிடங்கள் வரை சேமிக்கலாம்.

3. நேரம் கடந்து சமைத்தல்: ஒவ்வொரு சமையலுக்கும் ஒரு நேரம் உண்டு. ஒரு சமையல் அதன் பக்குவத்திற்கு தயாரான பிறகும், நம்முடைய கவனக்குறைவால் அடுப்பிலேயே இருக்கும். சமையலுக்கான நேரத்தை சரியாக கணக்கிட்டு சமையலை முடித்துகொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதிக நேரம் அடுப்பை எரிய விடுதல் தேவையில்லை.

4. மூடிவைத்து சமைத்தல்: மூடி வைத்து சமைக்கும்போது எளிதாக கொதித்துவிடும். சிலர் மூடிகொண்டு மூடாமல் சமையல் செய்வார்கள். கொதிக்கும் நிலை கொண்ட சமையலுக்கு அருகிலேயே நின்று கிளற தேவையில்லை. அதுபோன்ற நேரங்களில் மூடிவைத்துவிட்டு எளிதில் கொதிக்க வைக்கலாம். இதனால் கேஸை சேமிக்க முடியும்.

5. குறைந்த அளவு வெப்பம்: சமையலின் சில நேரங்களில் அடுப்புத் தீயை குறைத்து வைத்துக்கொள்ளலாம் என்ற நிலை இருக்கும். அப்போதும் சிலர் முழு தீயை எரியவிடுவார்கள். அப்படி செய்யாமல் தேவையான இடங்களில் குறைந்த அளவு தீயை பயன்படுத்துவதும் சிலிண்டர் கேஸை சேமிக்கும்.


6. சமையலுக்கான அளவை தெரிந்துகொள்ளுதல்: சிலர் இரண்டு முட்டைகளை வேகவைக்க பெரிய பாத்திரத்தில் நீரை பிடித்து கொதிக்க வைப்பார்கள். அது தேவையில்லாதது. இங்கு முட்டை ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அதேபோல் ஒவ்வொரு சமையலுக்கும் ஓர் அளவு உண்டு. சமையலுக்கு தேவையான அளவு என்னவென்பதை சரியாக தெரிந்துகொண்டு சமைக்க வேண்டும்.


7.சமையல் பொருட்களை தயாராக வைத்திருத்தல்: இது மிகவும் முக்கியமான ஒன்று. இதுதான் சமையல் என்று முடிவாகிவிட்டால், காய்கறி, மற்ற பொருள்கள் என அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு சமையலை தொடங்க வேண்டும். பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு காய்கறி நறுக்குவது, பொருட்களை தேடிக்கொண்டு இருப்பது போன்ற வேலைகளால் நேர விரயமும், கேஸ் விரயமும் ஏற்படும்.


8. சரியான பாத்திரங்கள்: சமைக்கும் அளவுக்கு ஏற்ப சரியான அளவு பாத்திரங்களை பயன்படுத்துதல். சிறிய பாத்திரங்கள் எளிதில் வெப்பத்தை கடத்தும் என்பதால் சமையலின் அளவை கணக்கிட்டு, அதற்கு ஏற்ப பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும்.


9. நீரில் ஊறவைத்தல்: சில நேரம் அரிசிகள், பருப்புகள் போன்ற சில சமையல் பொருட்களை நீரில் ஊறவைத்தால் சமைக்க எளிதாகிவிடும். அப்படியான பொருள்களை நீரில் ஊறவைத்தே சமைக்க வேண்டும். அப்படி செய்தால் கேஸ் மட்டுமின்றி நேரமும் மிச்சம்.


10. சூடாக சாப்பிடுங்கள்: சமைத்துவைத்துவிட்டு ஒவ்வொருவராக சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஒருவர் தாமதமாக சாப்பிட்டாலும், சில பதார்த்தங்களை மீண்டும் சுடவைப்பது போன்ற வேலைகள் நடக்கும். இதனை தடுக்க சமைத்ததும், குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து சூடாகவே சாப்பிடலாம். தேவையின்றி சாப்பாடு நேரத்தை தள்ளிபோடவேண்டாம்.


11. மாற்று வழிகள்: அடிக்கடி சுடு தண்ணீர் பயன்படுத்துபவர்கள் ஃபிளாஸ்க் வாங்கி வைத்துக்கொண்டு சுடுதண்ணீரை பயன்படுத்தலாம். அடிக்கடி நீரை சுடவைக்கும் நிலை தடுக்கப்படும். அதேபோல் குக்கர் என்பதும் மாறி, எலெக்ட்ரிக் குக்கர் சந்தைக்கு வந்துவிட்டது. மின்சாரம் மூலம் எளிதில் சாதம் தயார் செய்யலாம். குக்கருக்கும், எலெக்ட்ரிக் குக்கருக்கும் ருசியில் மாற்றமில்லை என நினைப்பவர்கள் எலெக்ட்ரிக் குக்கர் பயன்படுத்தலாம். அதுபோல இண்டக்சன் ஸ்ட்வ் பயன்படுத்தலாம். முழு சமையலுக்கு இல்லை என்றாலும், அவ்வப்போது சின்ன சின்ன பயன்பாட்டுக்கு இண்டக்சன் ஸ்ட்வ் பயன்படுத்திக்கொள்ளலாம். மாற்று பொருட்களும் மின்சாரம் சார்ந்து இயங்கும் என்பதால் மின்சார கட்டணத்தையும் கணக்கிட்டு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com