இந்த வாரத்தில் வங்கிகள் வேலைநாள் குறைவாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் முன்னதாக திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியமாகி உள்ளது.
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் இன்று மற்றும் நாளை நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த கூட்டமைப்பில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இந்தியா முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்கள் என சுமார் 25 கோடி பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியாக நாடு முழுவதும் இன்றும் நாளையும் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர் சங்கங்களும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளன. எனினும் வங்கிச் சேவைகள் தொடரும் என பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஊழியர்கள் வருகை குறைந்தால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த வாரத்தில் மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதி மட்டுமே வங்கிகளுக்கு வேலைநாட்கள். ஏப்ரல் 1ஆம் தேதி வருடாந்திர கணக்கு முடிப்பதால் வங்கிகள் செயல்பட்டாலும், வாடிக்கையாளர்கள் சேவை இருக்காது. அதன்பின்னர் ஏப்ரல் 2ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு, மறுநாள் ஞாயிறு விடுமுறையால் வங்கிகள் செயல்படாது. இதனால், வங்கிச் சேவைகளை முன்கூட்டி வாடிக்கையாளர்கள் திட்டமிடுவது அவசியமாகிறது என வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
வேலைநாட்கள் குறைந்த போதிலும், இணையவழி சேவைகள் எப்போதும்போல இயங்கும் என்றும் ஏடிஎம்களில் போதிய பணம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்தி: துணை கேப்டனை அறிவித்தது குஜராத் டைட்டன்ஸ்: அவர் யார் தெரியுமா?