நாடு முழுவதும் இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக 10 லட்சம் காசோலைகள் தேங்கி இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த வெங்கடாசலம் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்களும், தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை அண்ணாசாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதாவை நிறைவேற்றக்கூடாது எனவும் முழக்கம் எழுப்பினர்.
இது தொடர்பாக பேசிய அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், 2 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். இதேபோல, திருச்சி, திருப்பூர், நாகை, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களிலும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.