நிறுவனங்கள் தங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட ஆரம்பித்து உள்ளன. சென்ற வாரம் டெக் மஹிந்திரா & பஜாஜ் பைனான்ஸ் தங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட்டன. சிறு முதலீட்டாளர்கள் நினைத்ததற்கு மாறாக இந்த காலாண்டு முடிவுகளுக்கு பிறகு டெக் மஹிந்திரா பங்கு ஏற்றத்தையும், பஜாஜ் பைனான்ஸ் பங்கு விலை இறக்கத்தையும் சந்தித்தன. டெக் மஹிந்திரா முடிவு மோசமாகவும் , பஜாஜ் பைனான்ஸ் முடிவு நன்றாக வந்ததுமே காரணம்.
இங்கு மட்டும் தான் இப்படியா என்றால் , அது தான் இல்லை , அமெரிக்காவில் டெஸ்லா மோசமான காலாண்டு முடிவுக்கு பிறகு விலை ஏற்றத்தையும், Meta நல்ல காலாண்டு முடிவுக்கு பிறகு இறக்கத்தையும் சந்தித்தன .
முதலில் பஜாஜ் பைனான்ஸ் : சென்ற ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடும் போது, நான்காம் காலாண்டில் 21% லாப வளர்ச்சியை எட்டியுள்ளது . இந்த நிதியாண்டில் (FY 2024) 26% லாப வளர்ச்சியை எட்டியுள்ளது.
இருப்பினும் அடுத்த நிதியாண்டுக்கான வழிகாட்டல் முதலீட்டாளர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது . அவை என்னவென்று கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
நிறுவனத்தின் வழிகாட்டு மதிப்பானது கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது குறைவாக இருப்பதாக முதலீட்டாளர்கள் கருதியதே 7% மேல் விலை வீழ்ச்சிக்கு காரணம்.
அடுத்து டெக் மஹிந்திரா : நிறுவனத்தின் லாப வளர்ச்சி கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடும் போது 41% குறைவாகவும் , வருமான வளர்ச்சி 6.2% குறைவாகவும் இருந்தது.
மேனேஜ்மென்ட் விஷன் 2027 என்று நிறுவனத்தின் Roadmap வெளியிட்டுள்ளது . அதில் FY2027 இல் நிறுவனத்தின் வருமான வளர்ச்சி முன்னணி IT நிறுவனங்களை விட அதிகமாகவும், வரிக்கு முந்திய வருமானம் 15% இருக்கும் எனவும், ROCE 30% (இப்போது 11% தான்) இருக்கும் எனவும் கணிக்கிறது. FY2025 திருப்புமுனை வருடமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கறது. இதுதான் பங்கு 7% மேல் உயர காரணம் .
ஒரு நல்ல நிறுவனம் குறைந்த மதிப்பில் கிடைக்கும் போது வாங்க வேண்டும் . பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பி/இ(P/E Ratio) 28.8 இதன் 5 ஆண்டு சராசரியானது 45% மேல் . டெக் மஹிந்திரா பங்கின் தற்போதைய பி/இ 50% மேல் அதன் 5 ஆண்டு சராசரியானது 21%. பஜாஜ் பைனான்ஸ் 2020 கொரோனாவிற்குப் பிறகு தற்போது குறைந்த மதிப்பில் வர்த்தகம் ஆகிறது. RBI இந்நிறுவனத்தின் பொருட்களான 'eCOM’ and ‘Insta EMI Card’ களை சென்ற நவம்பர் மாதம் தடை செய்தது, இந்த தடை விலக்கப்பட்டால் குறுகிய காலத்தில் பங்கு விலை உயரலாம். அதே சமயம் டெக் மஹிந்திரா சொல்லியபடி வளர்ச்சியை வரும் காலாண்டுகளில் காட்டவில்லை என்றால் பங்கு விலை வீழ்ச்சியை சந்திக்கலாம் .