10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி வாராக் கடன்கள் ரத்து !

10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி வாராக் கடன்கள் ரத்து !
10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி வாராக் கடன்கள் ரத்து !
Published on

கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் ரத்து செய்துள்ள நிலையில் அவற்றில் 80 சதவீத வாராக்கடன்கள் கடந்த 5 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருவது வங்கிகளுக்கு மட்டுமில்லாமல் இந்திய பொருளாதாரத்திற்கே பெரிய தலைவலியாக மாறி வருகிறது. வாராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கி பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் புகார் உள்ளது. 
வங்கிகளில் பல கோடி ரூபாய் பணத்தை கடனான பெற்றுவிட்டு பலர் அதனை திரும்பச் செலுத்தாமல் உள்ளனர். இதனால் வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வாராக்கடன்களை குறைத்து காட்ட வங்கிகள் பல கோடி ரூபாய் வாராக்கடன்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் ரத்து செய்துள்ள நிலையில் அவற்றில் 80 சதவீத வாராக்கடன்கள் கடந்த 5 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 1,08,374 கோடி வாராக்கடன்களை வங்கிகள் ரத்து செய்துள்ளது. அதுவே 2017-18-ஆம் ஆண்டில் 1,61,328 கோடியாக அதிகரித்துள்ளது. 2018-19-ஆம் ஆண்டின் தொடக்க 6 மாத காலத்தில்வங்கிகள் 82,799 கோடி வாராக்கடன்களை ரத்து செய்துள்ளது. அதுவே 2018-ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் அபாரமாக 64,000 கோடி வாராக்கடன்களை ரத்து செய்துள்ளது.

வங்கிகளை கடன் பிரச்னையில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக, கடந்தாண்டு மக்களிடம் இருந்து பெற்ற வரிப் பணத்தை வங்கிகளுக்கு அரசு வழங்கியது. ஆனால் வங்கியோ வாராக்கடன்களை மீட்டெடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்காமல் அதனை குறைத்துக் காட்டுவதிலேயே குறியாக உள்ளது. இதற்காக வாராக்கடன்களை ரத்து செய்தும் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் ரத்து செய்துள்ளது. அதில் கடந்த 2014-ஆம் ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 5,55,603 கோடி வாராக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்ட வாராக்கடன்களில் 80 சதவீத வாராக்கடன்கள் கடந்த 5 ஆண்டுகளிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கித் தரப்பில் கூறும்போது, வாராக்கடன்களை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் கூட அதனை மீட்டெடுக்கும் முயற்சியும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 15 முதல் 20 சதவீதத்திற்கும் குறைவான வாராக்கடன்களையே வங்கிகள் மீட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com