சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் கேலக்சி வகை சாக்லெட்டுகளை திரும்பப்பெறுவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான மார்ஸ் அறிவித்துள்ளது.
சாக்லெட் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருவது மார்ஸ் நிறுவனம். பல ஆண்டுகளாக சாக்லெட் தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் பல சாக்லெட்டுகளின் சுவைக்கு உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகள் கிட்டத்தட்ட அடிமையாகவே இருக்கின்றனர். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் மார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சாக்லெட்டுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து, அயர்லாந்தில் வினியோகிக்கப்பட்ட கேலக்சி சாக்லெட்டுகளை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சாக்லெட்டில் சான்மோனிலா என்ற வகை பாக்டீரியாக்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை மார்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது. இவ்வாறு சாக்லெட்டுகளை திரும்பப் பெறுவது இந்தாண்டில் இது இரண்டாம் முறை. இந்தாண்டின் தொடக்கத்தில் சுமார் 55 நாடுகளில் வியாபாரத்திற்காக வினியோகம் செய்யப்பட்ட கேலக்சி சாக்லெட்டுகள் மார்ஸ் நிறுவனம் திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.