பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் வருமானம் கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இரு மடங்காக உயர்ந்துள்ளது.
அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பதஞ்சலியின் உற்பத்திப் பொருட்கள் மிக வேகமாக விற்பனையாகும் பொருட்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது நெஸ்லே, கோத்ரேஜ், பிரிட்டானியா மற்றும் டாபர் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை விட பதஞ்சலி பொருட்கள் அதிக விற்பனையாகி வருகின்றன.
ஆயுர்வேத பொருட்கள் விற்பனையின் மூலம் பதஞ்சலி நிறுவனத்திற்கு 2016-17-ம் ஆண்டு ரூ. 10,216 கோடி வருமானம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது அந்த நிறுவனம். இது அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தை விட இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் 30,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இது குறைவு.
ஆனால் நெஸ்லே (ரூ 9519 கோடி), கோத்ரேஜ் (ரூ 9134 கோடி) ஆகிய நிறுவனங்களின் கடந்த வருட வருமானத்தை பதஞ்சலி இப்போது முந்தியுள்ளது. பதஞ்சலி நிறுவனம் தன்னுடைய பொருட்களின் விற்பனையை ரூ 20,000 கோடிக்கு எடுத்து செல்லும் முனைப்பில் உள்ளது. பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மற்றும் மூலிகை பொருட்கள், திவ்ய யோக மருந்தகங்கள், கிராம யோக நியாஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
கடந்த வருடம் பதஞ்சலி நிறுவனத்திற்கு நெயின் (தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்) விற்பனை மூலம் ரூ 1,467 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதே போல டான்ட் காட்தி பற்பசை (ரூ 940 கோடி), கேஷ் காட்தி ஷாம்பு (ரூ 825 கோடி), மூலிகை குளியல் சோப்பு (ரூ 574 கோடி ரூபாய்), கச்சி கானி கடுகு எண்ணெய் (ரூ 522 கோடி) ஆகியவையும் பெரும் அளவில் விற்பனையானது.
தற்போது, உள்நாட்டு ஷாம்பு சந்தையில் பதஞ்சலி 15 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. பற்பசையில் 14 சதவீத பங்கும், தேனில் 50 சதவீத பங்கும் இந்த நிறுவனத்தின் பொருட்களுக்கு உள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் அழகு மற்றும் அழகுசாதன பொருட்கள் சந்தையில் ‘சவுந்தர்யா’ என்ற பெயரில் பதஞ்சலி நிறுவனம் கால் பதித்தது. அந்த நிறுவனத்தின் முகம் கழுவும் கிரீம் 35 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது.
இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட விற்பனை இலக்கை எட்ட மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், அசாம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் ஐந்து புதிய உணவுப் பூங்காக்கள் தொடங்கவுள்ளது பதஞ்சலி. இதற்காக ரூ 5000 கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா முதலிய அண்டை நாடுகள் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மத்திய பிரதேசத்தில் ஒரு உற்பத்தி ஆலை தொடங்கவிருக்கிறது பதஞ்சலி. தற்போது 1 லட்சம் பேரை வேலைக்கு பணியமர்த்தியுள்ள பதஞ்சலி நிறுவனம் அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் கூடிய விரைவில் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவை விட்டு விரட்டும் என பாபா ராம்தேவ் கூறியிருந்தார். “மற்ற வெளி நாட்டு நிறுவனங்களை போல இல்லாமல், பதஞ்சலி நிறுவனம் தனது முழு லாபத்தை கல்வி, ஆராய்சி, பசு பாதுகாப்பில் பயன்படுத்துகிறது. இந்த நிறுவனம் 125 கோடி இந்தியர்களுடையது” என்றார் பாபா ராம்தேவ்.