கொரோனா இரண்டாம் அலை: ஆட்டம் காணத் தொடங்கியது ஆட்டோமொபைல் துறை!

கொரோனா இரண்டாம் அலை: ஆட்டம் காணத் தொடங்கியது ஆட்டோமொபைல் துறை!
கொரோனா இரண்டாம் அலை: ஆட்டம் காணத் தொடங்கியது ஆட்டோமொபைல் துறை!
Published on

கொரோனா இரண்டாம் அலை ஒவ்வொரு துறையிலும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றில் ஒன்றாக, ஆட்டோமொபைல் துறையில் சங்கிலி தொடர்போல பல விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா.

கடந்த ஆண்டு முதல் அலை முடிந்தவுடன் வேகம் எடுத்த துறைகளில் முக்கியமானது ஆட்டோமொபைல் துறை. பாதுகாப்பு கருதி பெரும்பாலானவர்கள் வாகனம் வாங்க விரும்புவதால் புதிய வாகன விற்பனை மட்டுமல்லாமல், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனையும் உயர்ந்துவந்தது. ஆனால், ஏப்ரல் மாதம் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து வாகன விற்பனை குறைந்தது. தவிர, இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டுப்பாடு ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் ஏப்ரல் மாத வாகன விற்பனை சரிந்திருக்கிறது.

மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாத கார் விற்பனை 25 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. தவிர, இரு சக்கர வாகன விற்பனையும் 27 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது.

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை கடுமையாக சரிந்திருக்கிறது. தற்போது பல மாநிலங்களில் லாக்டவுன் இருப்பதால் மே மாத விற்பனையும் மந்தமாகவே இருக்கிறது.

இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கின்றன. மாருதி சுசூகி நிறுவனம் மே 1-ம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கிறது. 9-ம் தேதி வரை முன்பு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மே மாதம் 16-ம் தேதி வரை பராமரிப்பு பணிக்காக உற்பத்தியை நீட்டிக்க முடிவெடுத்திருக்கிறது. தவிர, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டொயோடா கிர்லோஸ்கர், ஹோண்டா மோட்டார் சைக்கிள், போர்ட், பிஎம்ட்பிள்யூ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பராமரிப்பு பணி அல்லது இதர பணிகளுக்காக உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கிறது.

அதேபோல இருசக்கர வாகன பிரிவில் முன்னணி நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனம் உற்பத்தியை ஏற்கெனவே நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், மே மாதம் 16-ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்த முடிவெடுத்திருக்கிறது. நிறுவனத்தின் ஆறு ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதுபோல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி இருப்பதால், உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்பால் எங்களுக்கு எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆட்டோமொபைல் உதிரிபாக நிறுவனங்களின் சங்க த்தலைவர் தீபக் ஜெயின் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த சில நாட்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து யோசிக்க முடியவில்லை. ஆனால், பணியாளர்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம் என்றும் தீபக் ஜெயின் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல உதிரி பாகங்களுக்கு மட்டுமல்லாமல், ஏற்கெனவே இயக்கத்தில் வாகனங்களுக்கன மாற்று பாகங்களுக்கான (Replacement) தேவையும் குறைந்திருக்கிறது. பகுதி வாரியான லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகளால் தேவை குறைந்திருக்கிறது.

இரண்டாம் அலை வேகம் எடுத்திருக்கிறது. அதனால், முதலீட்டு சூழல் மாறி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில்தான் இந்தியாவில் சூழ்நிலை ஏற்றம் அடையும். தற்போதைக்கு உதிரிபாக நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சங்கிலித்தொடர் போல பல எதிர்மறை விளைவுகளை கொரோனா பேரிடர் ஏற்பத்தி இருக்கிறது. இப்போதைக்கு பருவமழை நன்றாக இருக்கும் என்னும் கணிப்பு வெளியாகி இருப்பதால் கிராமப்புற தேவை உயரும் என்பது மட்டுமே இந்தத் துறையில் தற்போது இருக்கும் சாதகமான விஷயம்.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com