ஏப்ரல்-1 : இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்ட நாள் இன்று..!
நாட்டில் பண நோட்டுகள் வெளியிடுவதை ஒழுங்குப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
1935 ஆம் ஆண்டில் தனியாரால் உருவாக்கப்பட்ட இந்த வங்கி 1949 ஆம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டு, அதன்பின்னர் முழுமையாக அரசுக்கு சொந்தமான நிறுவனமானது. ஆரம்பத்தில் கொல்கத்தாவில் ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் இயங்கியது, பின்னர் 1937 ஆம் ஆண்டு முதல் மும்பையில் இதன் மத்திய அலுவலகம் இயங்கி வருகிறது.
நாட்டின் கருவூலமாக கருதப்படும் இவ்வங்கி மூலமாக பணநோட்டுகள் வெளியிடுவதை ஒழுங்குப்படுத்துதல், நிதியாதாரத்தை நிலையாக பாதுகாக்கும் வகையில் இருப்பினை கையாளுதல், வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், முறைசாரா நிதி நிறுவனங்களை மேற்பார்வையிட்டு கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் மற்ற வங்கிகளை பணப்பரிவர்த்தனைக்களுக்கு பயன்படுத்துவதைப்போல ரிசர்வ் வங்கியை பயன்படுத்தமுடியாது, இந்த வங்கிக்கு சென்னை, மும்பை, கொல்கத்தா, புதுதில்லி உள்ளிட்ட 4 மண்டலங்களும், நாடு முழுவதும் 22 கிளைகளும் உள்ளன. தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் உள்ளார்.