அதானி நிறுவனம் ஆந்திராவிலுள்ள கிருஷ்ணபட்டிணம் துறைமுகத்தின் 25 சதவீத பங்குகளை ரூபாய் 2,800 கோடிக்கு வாங்கியுள்ளது. இதனால் அத்துறைமுகத்தில் அதானி நிறுவன பங்குகள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ) , ஆந்திராவிலுள்ள கிருஷ்ணபட்டிணம் துறைமுகத்தின் விஸ்வ சமுத்திர ஹோல்டிங்ஸின் 25 சதவீத பங்குகளை ரூபாய் 2,800 கோடிக்கு வாங்கியுள்ளது. இதனால் கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தில் அதானி நிறுவனம், தனது பங்குகளை 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணபட்டணம் துறைமுகம் அனைத்து வானிலையையும் தாக்குப்பிடிக்கும் ஆழமான துறைமுகமாகும். 20 கி.மீ நீர்பரப்பு மற்றும் 6,800 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தில் தற்போது ஆண்டுக்கு 64 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படுகிறது, இதனை 300 மில்லியன் டன்னாக மாற்றும் இலக்குடன் அதானி நிறுவனம் துறைமுகத்தை மேம்படுத்தவுள்ள்து.
இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமான அதானி நிறுவனத்தின் வசம், குஜராத்தில் முந்த்ரா, தஹேஜ், டுனா மற்றும் ஹசிரா, ஒடிசாவில் தம்ரா, கோவாவில் மோர்முகாவோ, ஆந்திராவில் விசாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணபட்டணம், மகாராஷ்டிராவில் டிகி மற்றும் சென்னையில் கட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் ஆகிய 12 துறைமுகங்கள் உள்ளன. இவை நாட்டின் மொத்த துறைமுகத் திறனில் 24 சதவீதத்தைக் கொண்டுள்ளன.