தொழில் புரிவதற்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் நாட்டிலேயே கடைசி 3 இடங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை அதிகாரி அமிதாப் காந்த் இதைத் தெரிவித்தார். தொழில் மற்றும் வணிகம் புரிவதற்கு உகந்த மாநிலங்களில் ஆந்திரா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளதாக அவர் தெரிவித்தார். இப்பட்டியலில் தமிழகம், கேரளா, அசாம் ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளதாக அவர் கூறினார்.
கிராமப்புற மின்சார வசதி பட்டியலில் ஆந்திரா, கோவா, கேரளா, பஞ்சாப், தமிழகம் சிறந்து விளங்குவதாக அவர் கூறினார். இதில் பீகார், நாகாலாந்து மிகவும் பின்தங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மாணவர்கள் படிக்கும் திறனில் தமிழகம், மிசோராம், கேரளா சிறந்து விளங்குவதாகவும் உத்தராகண்ட், சட்டீஸ்கர், பீகார் ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளதாகவும் அமிதாப்காந்த் கூறினார்.