ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் அட்சய திருதியை முன்னிட்டு ஆன்லைனில் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்குப்பின் வளர்பிறையில் வரும் மூன்றாவது நாள் அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. எனவே அட்சய திருதியை அன்று சிறிதளவு தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என பெரும்பாலானோர் எண்ணுவர். அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும், நள்ளிரவு வரை வியாபாரம் நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் நகைக்கடைகள் ஆன்லைனில் தங்கத்தை விற்பனை செய்கின்றன. தாங்கள் விரும்பும் கடையின் இணையதளத்துக்குச் சென்று பொதுமக்கள் தங்கத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். சில கடைகள் வீடியோ கால் மூலம் நகையின் மாடல்களை வாடிக்கையாளர்கள் காண்பித்து ஆர்டர் எடுப்பதாக கூறப்படுகிறது.
வாங்கும் தங்கத்துக்கான பணத்தை ஆன்லைனிலேயே செலுத்திவிட வேண்டும். அதற்கான சான்றிதழ் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். ஊரடங்கு முடிந்த பிறகு எந்த கடையில் முன்பதிவு செய்தார்களோ அங்கு சென்று தங்கக்காசாக வாங்கிக் கொள்ளலாம். நகையாக வேண்டுமென்றால் அதற்குரிய செய்கூலி மற்றும் சேதாரத்தை செலுத்த வேண்டும்.