ஏர் டெக்கான் விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அதன் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் கூறியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தால் குறைந்த கட்டண விமான சேவையாகத் தொடங்கப்பட்டது, ஏர் டெக்கான். ’சிம்பிளி பிளை’ என்ற வாசகத்துடன் செயல்பட்ட இந்த விமானம், போட்டிகளை சந்திக்க முடியாமல் சரிவைச் சந்தித்தது. பின்னர் கிங்பிஷர் விமான நிறுவனத்துடன் இணைந்தது. கிங்பிஷர் 2011-ம் ஆண்டில் இருந்து தனது சேவைகளை நிறுத்திக்கொண்டது.
இந்நிலையில் இந்தியாவின் சிறு நகரங்களை இணைக்கும் விமான சேவையைத் தரும், 'உடான்' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். சிறு நகரங்களை இணைக்கும் இந்த விமான திட்டத்தின் நோக்கம் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்குவது. இந்த திட்டத்தின் படி, ஏர் டெக்கான் நிறுவனம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. வரும் 22-ம் தேதி நாசிக்கில் இருந்து மும்பைக்கு இதன் முதல் விமானம் இயக்கப்படுகிறது.
‘நாசிக்கில் இருந்து மும்பைக்கு சாலை வழி செல்ல 4 மணி நேரமாகிறது. விமானத்தில் 40 நிமிடத்தில் சென்று சேரலாம். மும்பை, தானே, நாசிக், ஜல்கான் ஆகிய பகுதிகளில் முதல் விமானம் இயங்குகிறது. டிக்கெட் கட்டணம் ரூ.1400. சில அதிர்ஷ்டசாலி பயணிகளுக்கு ரூ.1 கட்டணத்திலும் டிக்கெட் கிடைக்கும். ஜனவரியில் ஆக்ரா, சிம்லா, லூதியானா, டேராடூன், குளு பகுதிகளை டெல்லியுடன் இணைக்கும் வகையிலும் விமான சேவை தொடங்கப்படும்’ என்று ஏர்டெக்கான் நிறுவனர் கோபிநாத் கூறினார்.