இந்த வாரம் முழுவதும் ஐபிஓ மூலம் மத்திய அரசு விற்பனைக்கு கொண்டு வந்துள்ள எல்ஐசி பங்குகள் அனைத்தையும் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் நான்கே நாட்களில் குவிந்துள்ளன.
எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகளை, அதாவது 22.13 கோடி பங்குகளை விற்று கிட்டத்திட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திங்கட்கிழமையன்று விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலைக்குள் இந்த ஐபிஓ மூலம் விற்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையை விட அதிக அளவில் பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பங்குச்சந்தையில் தற்போது காணப்படும் சரிவையும் தாண்டி விண்ணப்பங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் மூன்று தினங்களிலேயே, எல்ஐசி ஐபிஓ மூலம் விற்கப்படும் பங்குகளில் 67 சதவிகிதம்வரை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் பதிவாகியிருந்தன. மே 2ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணி, மே 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆயுள் காப்பீடு துறையின் முடிசூடா பேரரசாக விளங்கிவரும் எல்ஐசியின் பங்குகளை விலைக்கு வாங்க பொதுமக்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள், மற்றும் அந்த மத்திய அரசு நிறுவனத்தின் ஊழியர்கள் புதன்கிழமை காலை முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 60 ரூபாய் வரை தள்ளுபடி எனவும், ஊழியர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 40 ரூபாய் தள்ளுபடி எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் உற்சாகமாக எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை வாங்க விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
முதல் கட்டமாக, திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மொத்தமாக பங்குகளை வாங்கும் "நங்கூர முதலீட்டாளர்கள்" 5,620 கோடி ரூபாய் மதிப்புள்ள எல்ஐசி பங்குகளை விலைக்கு வாங்க விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். எனவே பங்குச்சந்தை மேலும் சரிந்தாலும், எல்ஐசி ஐபிஓ திட்டமிட்டபடி முழுமையாக விற்பனையாகும் என மத்திய அரசு நம்புகிறது. அமெரிக்காவிலும் வட்டி விகிதங்கள் உயர உள்ளதால், பங்குச்சந்தைகள் தள்ளாடி வருகின்றன. எனவே புதன்கிழமை கடும் சரிவை கண்ட பங்குச் சந்தை, வியாழக்கிழமை என்றும் தொடர் தடுமாற்றத்தை சந்தித்தது.
எல்ஐசி பங்குகளின் விலையை மத்திய அரசு குறைவான அளவிலேயே நிர்ணயித்துள்ளதால், ஐபிஓ மே 9 ஆம் தேதிக்குள் முழுமையாக விற்று தீர்ந்துவிடும் என அதிகாரிகள் கருதுகின்றனர். எல்ஐசியின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 ஆக இருக்கும் எனவும் எல்ஐசி பாலிசிதாரர்கள் எல்ஐசி ஊழியர்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் எனவும் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ மூலம், எல்ஐசி பங்கு விற்பனையில் 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2.21 கோடி பங்குகள் பாலிசிதாரர்களுக்கும்; 15.80 லட்சம் பங்குகள் ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 15 பங்குகளுக்கு ஒவ்வொரு முதலீட்டாளரும் விண்ணப்பிக்க வேண்டும் என எல்ஐசி அறிவித்துள்ளது.
ஐபிஓ முடிந்தபின் மே 17ம் தேதிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தகம் செய்யப்படும். விண்ணப்பங்களின் அடிப்படையில் பங்கு விலை என்ன, யாருக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்படும். உச்சபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 945 ரூபாய்க்கு எல்ஐசி பங்குகள் ஐபிஓ மூலம் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு கருதுகிறது.
- கணபதி சுப்பிரமணியம்