இந்திய சந்தையில் எத்தனையோ பைக்குகள் இருந்தாலும் ராயல் என்ஃபில்டு நிறுவனத்தின் புல்லட் பைக்குக்கு தனி மவுசு இருக்கிறது. இதனால் புல்லட் பைக்குக்கு எதிராக பல்வேறு நிறுவனஙகளும் புதிய பைக்குகளை தயார் செய்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் ஹெச்’நெஸ் சிபி 350 என்ற புதிய பைக்கை தயாரித்துள்ளது. நெடுந்தூர பயணம் செய்யும் பைக் பிரியர்களுக்கும், இளம் வயதினருக்கும் பிடிக்கும் வகையில் இந்தப் பைக் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஹோண்டா நிறுவனம் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சிபி 350 டிஎல்எக்ஸ் மற்றும் சிபி 350 டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு ரகங்களில் இந்த பைக் வெளியிடப்படுகிறது. வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்த பைக் முன்பதிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிபி 350 டிஎல்எக்ஸ் மாடலில் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.85 லட்சம் எனவும், சிபி 350 டிஎல்எக்ஸ் ப்ரோ மாடலின் விலை ரூ.1.90 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
350 சிசி இன்ஜின் பவர் கொண்ட இந்த இரண்டு மாடல்களிலும் அதிநவீன தொழில் நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் அக்டிவேட் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் புளூடூத் மூலம் இணைக்கும் வகையில் இதில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பைக்கின் இருப்பிடம், மியூசிக், போன் கால்ஸ், இன்கமிங் மெசெஜ் மேலும் பலவற்றை அறிந்துகொள்ள முடியும். அத்துடன் சிங்கிள் சிலிண்டர், விரைவான ஏர் கூலிங் சிஸ்டம் ஆகியவை இந்த பைக்கில் உள்ளது.