இ-காமர்ஸ் துறை வளர்ச்சியின் காரணமாக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களும் அதற்கு இணையாக வளர்ந்து வருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் எக்ஸ்பிரஸ்பீஸ். கடந்த வாரம் இந்த நிறுவனம் யுனிகார்ன் பட்டியலில் இணைந்திருக்கிறது. 100 கோடி டாலர் சந்தை மதிப்பை அடையும் நிறுவனங்களை யுனிகார்ன் நிறுவனங்கள் என அழைக்கிறோம். எக்ஸ்பிரஸ்பீஸ் சந்தை மதிப்பு 120 கோடி டாலரை எட்டி இருக்கிறது.
நடப்பு 2022-ம் ஆண்டில் யுனிகார்ன் நிலையை அடையும் எட்டாவது நிறுவனம் இதுவாகும். ஜனவரியில் ஐந்து நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை அடைந்தன. பிப்ரவரியில் இதுவரை 3 நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை அடைந்திருக்கின்றன.
புனேவை மையமாக கொண்டு செயல்பட்டுவரும் எக்ஸ்பிரஸ்பீஸ் நிறுவனம் சமீபத்தில் சீரியஸ் எப் முதலீட்டை பெற்றது. பிளாக்ஸ்டோன், டிபிஜி கேபிடல், சைரஸ் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்திருக்கின்றன. இதுதவிர ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த நார்வெஸ்ட் வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் இன்வெஸ்ட் கார்ப் ஆகிய நிறுவனங்களும் இந்த முதலீட்டில் பங்கு பெற்றுள்ளன.
குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும் பர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் பொருட்களை ஆரம்பத்தில் விநியோகம் செய்துவந்தது இந்த நிறுவனம். அதன் பிறகு 2015-ம் ஆண்டு எக்ஸ்பிரஸ்பீஸ் தனியாக பிரிக்கப்பட்டு புதிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த நிறுவனத்துக்கு என நிதி திரட்டும் பணியை தொடங்கியது.
எக்ஸ்பிரஸ்பீஸ் நிறுவனத்துக்கு 1,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். பேடிஎம், லென்ஸ்கார்ட், மீஷோ, ஷாமி, நெட்மெட்ஸ், ஸ்நாப்டீல் உள்ளிட்ட பல வாடிக்கையாளர்கள் உள்ளனர். 3,000 நகரத்துக்கு டெலிவரி செய்கின்றனர், ஒரு நாளைக்கு 30 லட்சம் பார்சல்களை இந்த நிறுவனம் டெலிவரி செய்கிறது.
வழக்கமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும். ஆனால் இந்த நிறுவனம் லாபத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 12 மாதத்தில் 70 சதவீத வளர்ச்சி
இந்திய லாஜிஸ்டிக்ஸ் துறையில் எக்ஸ்பிரஸ்பீஸ் தவிர மூன்று யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. டெலிவரி, ரிவாகோ, பிளாக்பக் ஆகிய யுனிகார்ன் நிறுவனங்கள் ஏற்கெனவே உள்ளன. இதில் டெலிவரி நிறுவனம் ஐபிஓவுக்கு விண்ணப்பித்திருக்கிறது. மற்றொரு முக்கியமான நிறுவனமான இகாம் எக்ஸ்பிரஸ் நிறுவனமும் ஐபிஓவுக்கு விண்ணப்பித்திருக்கிறது.
கோவிட் காரணமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது உயர்ந்திருக்கிறது. அதனால் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் வருமானமும் உயர்ந்திருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த துறையின் சராசரி வளர்ச்சி 18 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. 2027-ம் ஆண்டு இந்த துறையின் சந்தை மதிப்பு 11.48 பில்லியன் டாலர் என கணிக்கப்பட்டிருக்கிறது.