‘எழுத்துச் சித்தர்’ பாலகுமாரன் உதிர்த்த 10 முத்துகள்... பிறந்த தின சிறப்புப் பகிர்வு! #VisualStory

Prakash J

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள்; ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு முகம் வெளியே வரும். வாழ்க்கையில் அதிகம் நடிப்பவருக்கு தன் உண்மையான முகம் எதுவென்று தெரியாமல் போகும்.

எப்போது ஒட்ட வேண்டும்; எப்போது வெட்டிக்கொள்ள வேண்டும் என்று வெகுசிலருக்கே உலகில் தெரியும். அதிக ஆசை இல்லாதவருக்கே இதைச் செயல்படுத்த முடியும்.

எல்லா முடிவுகளும் பிரச்னைகள் அழுத்தத்தில் தானாய் வெளிவரும்; பிரச்னைகள் அழுத்தாமல் மேலோட்டமாய் இருக்கும்போது எடுக்கப்படும் முடிவுகள் இன்னொரு பிரச்னை ஆகிவிடும்.

நல்லதும் கெட்டதும் சந்தையில் மலிந்துதான் இருக்கும்; வாங்குபவனுக்கு அறிவு வேண்டும். சொல்லிக் கொடுப்பவனைவிட, கற்றுக் கொள்பவனுக்குத்தான் ஞானம் வேண்டும். எதைக் கேட்கிறோம் என்கிற தெளிவு வேண்டும்.

எது நல்லது; எது கெட்டது? என வாழ்க்கையில் தேர்ந்தெடுத்தல் என்பது மிகப்பெரிய அவஸ்தை. ஆனால் தினம் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

கோபத்தில் பதற்றப்படுபவன் மிருகம். மிருகத்துக்கு வெற்றி, தோல்வி முக்கியமில்லை. மனிதருக்கு முக்கியம். வெற்றி வேண்டுபவன் தன் கோபத்தை உள்ளடக்கி பொறுமையால் பதனம் செய்து தன் கோபம் முழுவதும் தன் வேலை திறமையில் காட்ட வேண்டும்.

மனம் கொதிநிலையில் இருந்தால், உடம்பு பாழாகும். உடம்பு பாழ்பட்டிருந்தால், மனம் கொதிநிலைக்குப் போகும். வலியே இல்லாத, சுணக்கமே இல்லாத உடம்பு அமைதியான மனத்தைக் கொண்டிருக்கும். ஆழ்ந்து சிந்திக்க உடம்பின் பலம் உதவும். மனமும், உடம்பும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.

மதம் என்பது பொழுதுபோக்கும் போதை. தெளிவு தரும் அமிர்தம். அரசை மடக்கிக் கட்டும் சங்கிலி. அரசபீடத்தை அசைக்கும் கடப்பாறை.

கொலை என்பது ஆத்திரத்தில் ஏற்படுகிற கொடூரம். அன்பு மறுக்கப்படுவதுகூட கொடூரம்தான். உதவி தேவைப்படும் நேரத்தில் சிரித்துக்கொண்டு சும்மா இருப்பதுகூட கொலை முயற்சிதான்.

ஏன் அவமானப்பட்டோம் என்பதை யோசிக்கையில், தனது குறையும் நிறையும் தெளிவாய்ப் புரியும். தன்னுடைய குறைகள் தெரியும்போது, அதை நிறையாக்கிக் கொள்ளும் வழியும் தெரியும். குறை களைந்து நிறையாக்கிக்க் கொள்ளும் வேலையைத்தான் ஒருவன் இடைவிடாது செய்ய வேண்டும்.