Prakash J
இந்திய கிரிக்கெட் அணியின் ’ரன் மெஷின்’ என்று அழைக்கப்படும் விராட் கோலி, ‘ஒன் 8 கம்யூன்’ என்ற பெயரில் டெல்லி, கொல்கத்தா, புனே, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உணவகங்களை நடத்தி வருகிறார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டராக விளங்கும் ரவீந்திர ஜடேஜா, தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஜட்டு ஃபுட் ஃபீல்ட் என்ற உணவகத்தைத் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கபில் தேவ், ’லெவன்ஸ்’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இவருடைய உணவகம் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்தின், ஆம்ஸ்டெர்டேம் நகரில், கடந்த ஜூன் 23ஆம் தேதி ’ரெய்னா இந்திய உணவகம்' என்ற உணவகத்தைத் தொடங்கினார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 2005ஆம் புனேவில் ’டைன் பைன்’ (Zaheer Khan's Dine Fine) என்ற உணவகத்தைத் தொடங்கியதுடன், 2013ஆம் ஆண்டு புனேவில் உள்ள டாஸ் ஸ்போர்ட்ஸ் லாஞ்சை நிறுவனத்தையும் விரிவுபடுத்தினார்.
கொல்கத்தா இளவரசர் என்று அழைக்கப்படும் பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி 2004 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட்டில் 'சௌரவ்ஸ் ஃபுட் பெவிலியன்' என்ற பெயரில் உணவகத்தைத் தொடங்கி நடத்தினார். காலப்போக்கில் வணிகம் சரிவைச் சந்தித்தால் 2011இல் உணவகம் மூடப்பட்டது.
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் முன்னாள் வீரர் சச்சின், சமையல் கலை மீதிருந்த ஆர்வத்தால், 2002இல் 'டெண்டுல்கர்' என்ற பெயரில் ஓர் உணவகத்தைத் திறந்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து, மும்பை மற்றும் பெங்களூருவில் 'சச்சின்ஸ்' என்ற பெயரில் மேலும் இரண்டு உணவகங்களைத் திறந்தார். ஆனால், காலப்போக்கில், வணிகம் முடங்கியதால், அவை 2007இல் மூடப்பட்டன.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்டரான வீரேந்திர சேவாக்கும், கடந்த 2006ஆம் ஆண்டு, டெல்லி மோதி நகர்ப் பகுதியில் ‘சேவாக் ஃபேவரிட்ஸ்’ என்ற பெயரில் ஓர் உணவகத்தைத் தொடங்கினார். சில மாதங்கள் இந்த உணவகம் சிறப்பாகச் செயல்பட்டபோதும், பின்னர் முடங்க ஆரம்பித்தது. தவிர, சேவாக் சக உரிமையாளர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அஜய் ஜடேஜா, லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் திவாகர் சாஸ்திரியுடன் இணைந்து டெல்லியில் 'சென்சோ' என்ற இத்தாலிய உணவகத்தைத் திறந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இந்த உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் வராததால் விரைவிலேயே மூடுவிழா கண்டது.