Jayashree A
மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்தி... மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி, ஒற்றைக்காலில் நிருத்த கணபதியாக காட்சி தருபவர், நிருத்த கணபதி.
கஜமுகாசுரனை தன் வாகனமாக்கிக் கொண்டு செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருபவர், புவனேச கணபதி.
பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் பழம், கதாயுதம், கரும்பு, சக்கரம், பாசம், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும்... துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர், மகா கணபதி.
பச்சைக்கிளி, மாதுளம்பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி.. தன் இருபுறமும், இரு தேவிகளை கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள் புரிபவர், லட்சுமி கணபதி.
பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தருபவர், ஹேரம்ப கணபதி.
சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிறமேனியுடன் பிரகாசமாக விளங்குபவர், விக்னராஜ கணபதி.
பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி ஆற்றலைக் குறிப்பவர் சித்தி கணபதி. சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியாகவும் காட்சி தருபவர் இவர்.
இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர் துவிஜ கணபதி.
பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர் சக்தி கணபதி. பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவரான இவர், செந்தூர வண்ணம் கொண்டவர்.
தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர் வீர கணபதி.
தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர் பக்த கணபதி.
பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடன் காட்சி தருபவர் தருண கணபதி.
மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர் பால கணபதி.