Prakash J
யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியாமல், நேரடியாக திரைப்பட இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கே.பாலசந்தர்.
கே.பாலசந்தரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 101 படங்கள் வெளிவந்துள்ளன. இவர் இயக்கிய
முதல்படம்: நீர்க்குமிழி
நூறாவது படம்: பார்த்தாலே பரவசம்
இறுதிப்படம்: பொய்
1981ல், கவிதாலயா என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பிற உதவி இயக்குநர்களுக்கும் வாய்ப்பு அளித்தார். இதன்மூலம் பல வெற்றி திரைப்படங்களைக் கொடுத்ததுடன், பல புதிய இயக்குநர்களையும் உருவாக்கினார்.
ரஜினிகாந்த், விவேக், நாசர், ராதாரவி, சார்லி, பிரகாஷ்ராஜ், சரத்பாபு, சிரஞ்சீவி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.வி.சேகர், ஏ.ஆர்.ரஹ்மான், திலீப், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் வாலி, மதன் பாப், மேஜர் சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் எனப் பல நடிகர்களை உருவாக்கியவர் பாலசந்தர்.
சுஜாதா, ஜெயப்பிரதா, சரிதா, ஜெயசித்ரா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா, ‘கல்கி’ ஸ்ருதி, விஜி, சித்தாரா, ஸ்ரீவித்யா, பிரமிளா, ரதி, ஜெயசுதா, சுமித்ரா, பாத்திமா பாபு, யுவராணி, விசாலி கண்ணதாசன் ஆகியோரை நடிகைகளாக மிளிரவைத்தவர் பாலசந்தர்.
சிவாஜி ராவ் என்ற பெயர் கொண்டிருந்தவரை, சினிமாவுக்காக ரஜினிகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்தவர் கே.பாலசந்தர். ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
பல படங்களுக்கும் மேலாக இயக்குநராகப் பணியாற்றியிருப்பினும், எம்.ஜி.ஆரை பாலசந்தர் இயக்கியதே இல்லை. அவரது தெய்வத்தாய் என்கிற படத்திற்கு மட்டும் அவர் வசனம் எழுதியிருந்தார்.