Cricketers Axar Patel (L), Shardul Thakur (2L), Cheteshwar Pujara (C)  PTI
Cricket

WTC 2023 | கடந்த முறை ரன்னர்... இந்த முறை..?

அத்தனை அணிகளையும் ஓட ஓட விரட்டி அடித்த கில் இங்கிலாந்திலும் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஐசிசி கோப்பை வென்ற கேப்டன் என்ற மிகப்பெரிய பெயர் ரோகித்துக்கு கிடைக்கும்.

Wilson Raj

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - இரண்டு ஆண்டுகள் நடந்த போட்டிகளின் முடிவில் இரண்டாம் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்தியா. பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது. இங்கிலாந்து மைதானம், ஆஸ்திரேலிய பவுலர்கள், ரிஷப் பண்ட் , பும்ரா , கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது, கேப்டன் ரோகித்தின் ஐபிஎல் ஃபார்ம் என அனைத்துமே கிட்டத்தட்ட இந்தியாவுக்கு எதிராகத்தான் உள்ளது. இந்தியாவுக்கு ஒரே ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் இந்த போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெறாதது மட்டும்தான். கடந்த முறை ரன்னர் என்பதால், இந்த முறையாவது வின்னர் என்னும் சாதனையைப் படைத்து 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக வெல்லுமா இந்தியா?

Rohit Sharma

ரோஹித்தின் ஐபிஎல் பார்ம் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதுவும் இறுதிப்போட்டி நடைபெற இருக்கும் இங்கிலாந்தில் நடந்த சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் எல்லாம் நன்றாகவே ஆடினார்‌. தனது முதல் ஓவர்சீஸ் சதத்தை கூட இங்கிலாந்தில் தான் அடித்தார். அவருடன் களமிறங்கும் மற்றொரு ஓப்பனர் கில் தனது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அத்தனை அணிகளையும் ஓட ஓட விரட்டி அடித்த கில் இங்கிலாந்திலும் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஐசிசி கோப்பை வென்ற கேப்டன் என்ற மிகப்பெரிய பெயர் ரோகித்துக்கு கிடைக்கும்.

அடுத்தது புஜாரா. வரும் ஆனா வராது என்று பாணி வீரர் புஜாரா.‌ சில நேரங்களில் ரன்கள் வரும் சில நேரங்களில் வராது. ஆனால் குறைந்தது 50 பந்துகளை சந்திப்பார் என்ற உத்தரவாதத்தை அவரை நம்பி தரலாம்‌. இங்கிலாந்து மைதானங்களில் முதல் சில ஓவர்களில் இருக்கும் ஸ்விங்கை காலி செய்ய புஜாரா அதிக நேரம் களத்தில் நிற்க வேண்டியது அவசியம். இங்கிலாந்து என்றாலே விராட் கோலிக்கு பிரச்சினைகள் அதிகம். 2014 தொடர்‌ என்னும் கருப்பு பக்கத்தை 2018ல் வெள்ளையாக அவர் மாற்றினாலும் கடந்த முறை ஆடும் போது முழு விராட் கோலி வெளிப்படவேயில்லை. இந்த முறை கடந்த டெஸ்ட் தொடரில் சதம் எல்லாம் அடித்து பிரெஷாக வந்துள்ளார். அதுவும் தனக்கு மிகவும் பிடித்தமான அணியான ஆஸ்திரேலியாவுடன் ஆடுகிறார்‌‌. இந்த ஒரு போட்டியில் மட்டும் வின்டேஜ் கோலியாக அவர் அவதாரம் எடுத்தால் எளிதாக கங்காருவை ஒரு வழி பார்த்து விடலாம்.

Virat Kohli

ரிஷப் பண்ட் இல்லாத மிடில் ஆர்டரில் ஏற்பட்டிருக்கும் ஓட்டையை அடைக்கும் கொத்தனாராக களமிறங்க வேண்டிய கட்டாயம் ரஹானே தலையில் விழுந்துள்ளது. ரஹானேவின் சமீபத்திய டெஸ்ட் ஆட்டங்களை பார்த்தால் அவரே தாவ வேண்டிய நேரத்தில் தவழ்வது போலத் தான் இருக்கிறது‌. இருந்தாலும் அந்நிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் என்றால் அண்ணனுக்கு அருள் வரும் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறது இந்தியா. இந்த முறை யாரும் உங்களை அவுட் ஆகச் சொல்லி சத்தமிட மாட்டார்கள் என்று தெம்பூட்டி ஜடேஜாவை அனுப்பி வைக்க வேண்டும். ஜடேஜாவின் வாள்வீச்சு சதம் ஒன்று இந்தியாவை மீட்டெடுத்தால் பாகுபலி சிலையை தூக்கும் காட்சியுடன் ஒப்பிட்டு வாட்சப் ஸ்டேட்டஸ் கூட வைக்கலாம். அனுபவம் குறைந்த கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக ஆட உள்ளார்‌. ரன்கள் அடிக்கிறாரோ இல்லையோ அது இரண்டாவது. வரும் கேட்ச்சுகளை சரியாக பிடித்து விட்டாலே பண்ட் வரும் வரை இவர்தான் நிரந்தர விக்கெட் கீப்பராக இருப்பார்.

இத்தனை இந்திய பேட்டர்களையும்‌ எதிர்கொள்ள காத்திருக்கிறது ஆஸ்திரேலியா பவுலிங் படை. கேட்டை பார்த்தாலே பயமா இருக்கு என்று கூறும் சந்திரமுகி வடிவேலு போல இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியா பவுலர்களை பார்த்து வருகின்றனர்‌. ஸ்டார்க், கம்மின்ஸ், போலண்ட் என இருப்பது போதாதென கூட கிரீனும் இருக்கிறார். இங்கிலாந்து ஸ்விங்கும் அவர்கள் பயன்படுத்தும் ட்யூக்ஸ் வகை பந்துகளுடன் இந்த பவுலிங் படையும் சரியாக இணைந்து ஆடினால் இந்தியாவின் இந்த ஐசிசி தொடர் கனவும் காற்றில் பறந்துவிடும்‌‌. இவர்களுடன் நேதன் லயனும் உள்ளார். பண்ட் இல்லை என்ற தைரியத்தில் களமிறங்கும் இவரின் பந்துகளும் ஆட்டத்தின் நான்காம் மற்றும் ஐந்தாம் நாள்களில் நிச்சயம்‌ ஆஸ்திரேலியாவுக்கு கை கொடுக்கும்.

Australia Team

ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஸ்மித் மற்றும் லபுஷேன் என இருவரை சுற்றி தான் கடந்த சில ஆண்டுகளாக சுழன்றது. ஆனால் இந்த முறை கவாஜா மற்றும் ஹெட் என எக்ஸ்ட்ரா லக்கேஜுகள் இரண்டு பேர் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நடந்து முடிந்த இந்திய தொடரிலேயே சிறப்பாக ஆடினர். இவர்களுடன் ஸ்மித் மற்றும் லபுஷேனும் இணைந்து விட்டால் இந்தியா அதிக நேரம் பந்து வீச வேண்டிய கட்டாயம் வரும். ஐபிஎல் சென்சேஷன் கிரீன் மற்றும் கீப்பர் கேரி கூட சில நேரங்களில் இந்தியாவுக்கு தொல்லை தரலாம். இவர்கள் எல்லாவற்றையும் சமாளித்து விட்டால் கூட இத்தனைக்கு பிறகும் ஆஸ்திரேலியாவின் லோயர் ஆர்டர் ஒன்று உள்ளது. இந்தியாவின் லோயர் ஆர்டர் போல அவ்வளவு சீக்கிரம் சரிக்க இயலாது. கம்மின்ஸ், லயன், ஸ்டார்க் என அத்தனை பேரும் குறைந்தது 20 பந்துகள் பிடிக்கக் கூடிய ஆட்கள். இவர்களுடன் மைக்கேல் நெசரும் அணியில் இருந்தால் இன்னும் கஷ்டம் தான் இந்தியாவுக்கு.

இந்தியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்லப் போகிறார்களா அல்லது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் அஷ்வினுடன் செல்லப் போகிறார்களா என்பது முக்கியம். சிராஜ், ஷமி மற்றும் தாகூர் நிச்சயம் அணியில் இருப்பர். இவர்களுடன் ஆடப்போவது உமேஷா அல்லது அஷ்வினா என்பது தான் ரோகித் முன் இருக்கும் பெரிய கேள்வி. சிராஜ் மற்றும் ஷமி இருவருமே சிறப்பாக ஆடினர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில். இவர்களுடன் மற்ற இரண்டு பந்து வீச்சாளர்களும் நன்றாக ஆடுவது முக்கியம். குறிப்பாக ஸ்மித் மற்றும் லபுஷேன் விக்கெட்டை வீழ்த்த போகும் பவுலர் இந்திய ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிடுவார்.

பேட்டிங்கை பலப்படுத்த கிஷன் கூட ஆடலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால் இது போன்ற‌ டெஸ்ட்டில் ஒவ்வொரு கேட்ச்சும் ஆட்டத்தை மாற்றம் என்பதால் விக்கெட் கீப்பர் மிகச் சிறப்பானவராக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பரத்தே சரியான தேர்வாக அமையும். அந்தந்த நாட்களை பொறுத்து தான் இது போன்ற ஃபைனல் ஆட்டங்களின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்பதால் அத்தனை வீரர்களும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கும் பட்சத்தில் பல நாட்கள் கழித்து ஐசிசி கோப்பை ஒன்றை கையில் ஏந்தலாம்.

வானிலை

இந்த சீசன் ஐபிஎல் ஃபைனலுக்குப் பின்னர், எதுவா இருந்தாலும் வெதர் ரிப்போர்ட்ட ஒரு வாட்டி பார்த்துக்கலாம் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். முதல் மூன்று நாள்களு, ஐந்தாம் நாளும் நம்ம சென்னையைப் போல வெயில் தான் இருக்கும். நான்காவது நாள் மதியம் மட்டும் மழை எட்டிப் பார்க்கும் எங்கிறது இங்கிலாந்து வெதர் ரிப்போர்ட்.